சிங்கப்பூரைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளர்கள் இருவர் டிக்டாக் சமூக ஊடகத் தளத்தால் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) சிறப்பிக்கப்பட்டனர்.
2026 தென்கிழக்காசிய டிக்டாக் விருதுகளில், கோங் மான் ஜிங் ஆண்டின் சிறந்த கல்விப் படைப்பாளர் விருதையும் எய்டன் ஜேம்ஸ் லூ ஆண்டின் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துபவர் விருதையும் வென்றனர்.
சுற்றுப்புறம், அறிவியல் சார்ந்த தகவல்களை எளிய முறையில் இளையர்களிடம் கொண்டு சேர்த்ததற்காகத் திருவாட்டி கோங் அங்கீகரிக்கப்பட்டார்.
தமது படைப்புகள் இளையர்களிடையே ஆர்வத்தைத் தூண்டி, நீடித்த நிலைத்தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கும் மூத்தோருக்கும் இலவசமாக முடிதிருத்தும் சமூகப் பணிகளை டிக்டாக்கில் ஆவணப்படுத்தியதற்காகத் திரு லூ பாராட்டப்பட்டார்.
இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளின் படைப்பாளர்களை ஒன்றிணைத்து, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்புகளை அடையாளம் காண்பதே அவ்விழாவின் நோக்கம் என டிக்டாக் சனிக்கிழமை (நவம்பர் 28) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
படைப்பாளர்களைச் சமூகங்களாக ஒன்றிணைப்பதில் டிக்டாக் தொடர்ந்து உறுதியாக உள்ளதாக அதன் தென்கிழக்காசிய உள்ளடக்கச் செயல்பாட்டுப் பொது மேலாளர் அங்கா அனுக்ரா புத்ரா தெரிவித்தார்.
