திரௌபதிக்கும் கண்ணகிக்கும் இடையேயான உரையாடல், மகாபாரத போரிலிருந்து வீடு திரும்பாத போர் வீரர் ஒருவரின் குடும்பத்தினரிடையே நிலவும் கிலி, காதலை வெறுத்த பெண்ணுக்கு மீண்டும் காதலின்மீது நம்பிக்கை பிறத்தல், நாடகம் எழுதுவதில் ஓர் எழுத்தாளர் எதிர்நோக்கும் சவால்கள் என பல்வேறு கருப்பொருள்களில் வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் எழுதிய குருநாடகங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.
தெஸ்பியன் சபா நாடகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஸ்க்ரிப்ட்ஸ் அன்பிலக்ட்’ நிகழ்ச்சியில் நவம்பர் 21ஆம் தேதி எட்டு எழுத்தாளர்களின் நாடகங்கள் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் (சிஃபாஸ்) மேடையேறின.
சென்னையைச் சேர்ந்த டம்மிஸ் டிராமா நாடகக் குழு நிறுவனர் ஸ்ரீவட்சன், எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். இணைய சந்திப்புகள்வழி எட்டு வார வழிகாட்டுதல் நடைபெற்றது.
இரண்டு மணி நேரம் நீடித்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கவனம் சிதறாத வண்ணம் நாடகங்கள் அவர்களைக் கவர்ந்தன. சிந்திக்க வைத்த நாடகங்களின்போது நிலவிய அமைதியும் சிரிக்க வைத்த நாடகங்களின்போது மக்களின் ஆரவாரமும் அரங்கிற்குக் கூடுதல் அழகு சேர்த்தன.
அனைத்து நாடகங்களிலும் எழுத்தாளர்களின் திறன் வெளிப்பட்டிருந்தாலும் சில நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன.
கண்ணன் வைஷ்ணவி லட்சுமியின் 19ஆம் நாள் நாடகம் மகாபாரத போரில் கலந்துகொண்ட போர் வீரர் ஒருவரின் தாயிற்கும் தாரத்திற்கும் இடையிலான உரையாடலைக் கொண்டு நகர்ந்தது.
பாண்டவர்களின் வெற்றியையும் கௌரவர்களின் தோல்வியையும் பல வடிவங்களில் கேட்ட, பார்த்த பலருக்கு அக்கதை மற்றொரு பரிமாணத்தை அறிமுகப்படுத்தி புத்துணர்ச்சியளித்தது.
‘சாம்பலுக்கு முன்’ என்ற நாடகம் கண்ணகி மதுரையை எரிப்பதற்கு முன் திரௌபதியுடன் உரையாடியிருந்தால் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அழகாக வெளிக்கொணர்ந்தது.
புஷ்பலீலா பிரபாகரனின் எழுத்தில் இரு கதாபாத்திரங்களின் வலிக்குப் பின்னுள்ள நியாயமும் அவர்களது செயல்களின் காரணங்களும் சிறப்பாக விவாதிக்கப்பட்டிருந்தன.
‘மேபி?’ என்ற நாடகம், முன்னாள் காதலனால் காதலின்மீது நம்பிக்கை இழந்த ஒரு பெண் வேறோர் ஆண்மகனைச் சந்திக்கும்போது மீண்டும் நம்பிக்கை பெறுவதை மையமாகக் கொண்டிருந்தது.
அருணா கந்தசாமியின் எழுத்தில் நகைச்சுவை அதிகமிருந்தாலும் கருத்தாழம் குறையவில்லை. அந்நாடகம் முழுவதும் பார்வையாளர்கள் வயிறு குலுங்கச் சிரித்து அரங்கத்தை சிரிப்பொலியால் நிரப்பினர். கணேசானந்தன் யாழினி, அலெக்ஸ் கொட்வின் இருவரின் நடிப்பு துடிப்புமிக்கதாகத் திகழ்ந்தது.
நாடகத்தில் இடம்பெற்ற நண்பரின் குரல், நாடகத்தை மேலும் நகைச்சுவையாக்கியது.
நிகழ்ச்சியின் இறுதி நாடகமாக மேடையேறிய ‘அன்டைட்டல்ட்’ நாடகம், எழுத்தாளர் ஒருவர் நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழில் எழுத சிரமப்படுவதை நகைச்சுவை பாணியில் படைத்தது.
ஜெயகுமார் அரவிந்தின் எழுத்தில் திரைப்படக் குறியீடுகளுக்கும் சிரிப்பூட்டும் வசனங்களுக்கும் எவ்விதக் குறையும் இல்லை. அவரது எழுத்திற்கு ஹரி என்.எசின் நடிப்பு வலுசேர்த்தது.
நாடகங்களை செ.ரா.சக்தி மகேஷ்வரனும் ஶ்ரீநிதி வெங்கட்டும் இயக்கினர். நிகழ்ச்சியின் செயல்பாட்டை மா.பிரியதர்ஷினி, சரண் குமார், லாவண்யா சுப்பிரமணியன் ஆகியோர் வழிநடத்தினர்.
நிகழ்ச்சியில் வேதாக்ஞா நரசிம்மா வயலின் வாசிக்க ஹிரண்மாயி ஆனந்த் குரல் கலைஞராக செயல்பட்டார்.
“இத்தகைய முயற்சிகள் வாயிலாக வளர்ந்துவரும் மேடை நாடகக் கலைஞர்களுக்குத் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள பாதுகாப்பான தளத்தை வழங்குவதே தெஸ்பியன் சபா நாடகக் குழுவின் நோக்கமாகத் திகழ்கிறது,” என்று குழுவின் தலைவர்களில் ஒருவரான காஞ்சனா பூவஹரன் தெரிவித்தார்.
குழுவின் முக்கிய முயற்சிகளாக நடிகர்களுக்கான ‘டுவோ பல்ஸ்’ நிகழ்ச்சியும் எழுத்தாளர்களுக்கான ‘ஸ்க்ரிப்ட்ஸ் அன்பிலக்ட்’ நிகழ்ச்சியும் விளங்குகின்றன.
