சிறுவயதில் முதல் முறையாகப் பெற்றோருடன் மேற்கொண்ட இந்தியப் பயணத்தில் கண்பார்வை இல்லாத ஒருவருக்கு சாலையைக் கடக்க உதவிசெய்ததுடன் மற்றொரு சிறு உதவியும் புரிந்ததை நினைவுகூர்ந்தார் சிங்கப்பூரரான முனைவர் ஏ ஜேஸன் எலியா, 43.
1990களில் பதின்ம வயதில் செய்த இந்தச் செயலால் கிடைத்த மட்டற்ற மகிழ்ச்சிக்கு இவ்வுலகில் எதுவுமே ஈடில்லை என்ற உணர்வு அவருக்குள் பளிச்சிட, அன்று தொடங்கிய இந்தியப் பயணத்தை இன்றுவரை விட்டுவிடாமல், தமது கனிவால் அதற்குப் புது வடிவம் கொடுத்து வருகிறார் திரு ஜேஸன்.
சமூக ஊடகத்தால் எந்தவொரு திசைக்குள்ளும் கால்பதிக்க இயலும் இக்காலத்தில், மானுடத்திற்குச் சேவையாற்ற புவியியல் அமைப்பு ஒரு தடையன்று; அதனால்தான் கடல்கடந்தும் மக்களுக்குச் சேவையாற்றி வருவதாகத் தமிழ் முரசிடம் கூறினார் இந்தச் சமூக ஆர்வலர்.
தமிழ்நாட்டின் சென்னையில் குறிப்பாக வியாசர்பாடி, ராயபுரம், உள்ளிட்ட வடசென்னைப் பகுதிகளில் இவரின் உதவிக்கரம் நீள்கிறது.
‘‘சிங்கப்பூரில் இருக்கும் நீங்கள் எதற்கு இங்கு வந்து உதவி செய்கிறீர்கள்?” என்ற கேள்விகளுடன் இந்தப் பயணம் தொடங்கியதாக முனைவர் ஜேசன் குறிப்பிட்டார்.
வியாசர்பாடி வீதிகளில் தகரத்தால் வேயப்பட்ட வீட்டோரமாய் நான் நடந்து செல்கையில், அங்குத் தெருக்களில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறார்களையும் பரவலாகப் பார்க்க முடியும்.
“அவர்கள் என் கைகளைப் பிடித்து, அண்ணா எனக்குப் புத்தகம் வாங்கித் தருவீர்களா எனக் கேட்கும்போது சமூக அமைப்புக்கு எழுதிப்போட்டு அந்த உதவி கிடைக்கும் வரை காத்திருங்கள் என்று சொல்வதற்கு எனக்கு மனமில்லை.
‘‘தம்பி, என் பிள்ளைக்கு மாத்திரை வாங்கித் தர முடியுமா என்று கேட்கும் எளிய தாய் ஒருவரிடம், விண்ணப்பக் கடிதம் தாருங்கள் எனக் கேட்கும் குணம் எனக்கில்லை.
‘‘என்னிடம் உதவி கேட்பவர்களுக்கு என்னிடம் உள்ளதைத் தயங்காமல் தருவதே என் நோக்கம்,’’ என்று தெரிவித்தார் திரு ஜேஸன்.
“மேலும், பல ஆண்டுகளாக நான் மேற்கொண்டுவரும் ஒவ்வொரு பயணத்தின்போதும் உடையின்றி, உணவின்றி, ஆதரவின்றி இருந்தோரைப் பரவலாகப் பார்க்க முடிந்தது.
“இவர்களின் நிலையைப் படம் பிடித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மெய்நிகர் உலகில் இயங்குவதைக் காட்டிலும் நேரடியாக இவர்களின் துயர் துடைக்க வேண்டும் என்ற முனைப்பே என்னுள் மேலோங்கியது,’’ என்று கூறினார் திரு ஜேஸன்.
“கனிவன்பே மனிதநேயத்தின் திறவுகோல் என்பது சிங்கப்பூர் எனக்குக் கற்பித்த ஒரு நற்பாடம். அயல்நாட்டில் நான் காண நேர்ந்த தீவிரமான இடர்களைச் சிங்கப்பூரில் கண்டதில்லை.
“தேவை உள்ளோருக்கான உதவி இங்குப் பேரளவில் கிடைப்பதை நான் கண்டுள்ளேன். ஆனால், அங்கு அதற்கான தேவை அதிகம் இருந்ததாக உணர்ந்தேன்.
“எனவேதான் நான் செல்லும் இந்தப் பாதையின் வழி இலகுவானதன்று எனத் தெரிந்தும், துணிவுடன் நாடு கடந்தும் உதவி செய்ய வேண்டும் என்று உறுதிபூண்டேன்,” என்றார் இவர்.
தாம் செல்லும் இடங்களில் காணப்படும் சிறார்களுக்குக் கல்வி உதவி, மூத்தோருக்குப் பொருளுதவி, இளையர்க்கு நிதியாதரவு எனப் பலவிதங்களில் விளம்பரமின்றி உதவி செய்துவரும் முனைவர் ஜேஸன், இதற்காக எந்தவோர் அமைப்பையோ ஆளுமையையோ தாம் நாடியதில்லை என்றார்.
‘‘தனியாகவே இதுவரை இந்த அறப்பணியை ஆற்றிவருகிறேன். இனிமேலும் என்னிடம் உள்ள சேமிப்பைக் கொண்டு உடலில் வலிமை இருக்கும் வரை சக மனிதர்களுக்குத் தொண்டாற்றுவதைத் தொடர்ந்து செய்வேன்,’’ என்று அவர் உறுதிகூறினார்.
சகோதரத்துவ உணர்வுடன் செயல்பட்டு வரும் திரு ஜேஸன் குறித்துத் தமிழ் முரசிடம் கருத்துரைத்தார் அவரது இந்திய நண்பர் ஷர்மேஷ் குமார்.
‘‘இந்தியாவிற்குத் திரு ஜேஸன் வந்துவிட்டால் அவரால் உதவி கிடைக்கப்பெற்ற பலர் அவரை அன்புடன் வரவேற்பார்கள். எனினும் இதன் மூலம் விளம்பரம் தேடாமல், கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் யாரேனும் ஒருவருக்கு அவர்களின் எதிர்காலம் சிறக்க வழிவகுக்கும் நம்பிக்கையின் வாசலை ஓசையின்றித் திறந்துவிடுவார் திரு ஜேஸன்,’’ என்றார் திரு ஷர்மேஷ்.
‘‘மக்கள் சேவையை எளிமையான இதயத்துடன் ஆரவாரம் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற காலஞ்சென்ற அதிபர் எஸ் ஆர் நாதன் வழிகாட்டுதலால் மேலும் வலுப்பெற்ற இந்தப் பயணம் வெகுநாள் நீடிக்கும். உதவி கிடைக்கும் ஒவ்வொரு வறியவர் முகத்தில் தோன்றும் புன்னகையும் அதற்கு ஊக்கமாக அமையும்,” என்றார் முனைவர் ஜேஸன்.

