இந்தியப் பண்பாட்டுடன் சிங்கப்பூரின் பண்பாட்டுக்கூறுகள் கலந்து காணப்படும் லிட்டில் இந்தியா தனித்துவம் வாய்ந்தது எனத் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
“இது நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில், நமது லிட்டில் இந்தியா, நமக்கே உரிய தனித்துவமான பண்புகளுடனும் அமைப்புடனும் கூடிய ‘சிங்கப்பூர் லிட்டில் இந்தியா’வாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்,” என்று திரு சான் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் தீபாவளி இரவு விருந்தில் திரு சான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
லிட்டில் இந்தியாவின் தனித்துவமிக்கப் பண்பாட்டை உயிரோட்டத்துடன் வைத்திருக்க லிஷா எடுத்துவரும் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார்.
“சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா மிகவும் சிறப்பு வாய்ந்த இடம். ஒவ்வொரு நாட்டிலும் ‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப்படும் சிறிய பகுதி இருக்கலாம். நமக்கும் அப்படித்தான் உள்ளது. ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் அது சற்று மாறுபட்டிருக்கும்,” என்று அவர் சொன்னார்.
பாரம்பரியத்தை உயிரோட்டத்துடன் வைத்திருப்பதற்கும், சிங்கப்பூரர்களுக்கு உரித்தான தனித்துவத்துடன் அதனைப் பேணுவதற்கும், இனம், மொழி, சமயம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் வெளிப்படையான ஒன்றாக அதனை வைத்திருப்பதற்கும் இந்தப் பணி தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
வணிகச் சூழல் தற்போது நிலையற்றதாக இருந்தாலும் அதனைத் தனித்துச் சமாளித்திட வேண்டியதில்லை என்றார் திரு சான்.
வணிக வடிவமைப்பில் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட திரு சான், லிஷாவுடன் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் இணைந்து செயலாற்றும் என்று கூறினார்.
ஏறத்தாழ 360 பங்காளிகளும் நலவிரும்பிகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக ஏற்பாட்டுக்குழுத் தலைவர் பழனியப்பன் ராமநாதன் தெரிவித்தார்.
“சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல் பங்காளிகளின் ஒவ்வொரு நன்கொடையும்தான் லிட்டில் இந்தியாவைப் பண்டிகை நாள்களில் ஒளிரச் செய்கிறது. நம் மரபு கட்டிக்காக்கப்படுவதில் அத்தகையோரின் தொடர்பும் ஆதரவும் இன்றியமையாததாக இருந்து வருகிறது,” என்று திரு ராமநாதன் குறிப்பிட்டார்.
