வெங்கட்ராமன் ஜோவித்தா ராஜ்குமார் ரித்திகா
மும்முரமாகச் செயலாற்றி, நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் சுகாதார நிறுவனத்திற்குப் பின்னால் அர்ப்பணிப்புமிக்க மருத்துவப் பராமரிப்புப் பணியாளர்களின் உழைப்பு இருக்கிறது.
நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்வதுமுதல் அடுத்த தலைமுறை சுகாதார வல்லுநர்களை உருவாக்குவதுவரை இவர்களின் பங்கு அளப்பரியது.
இவ்வாண்டு, தாதியர் துறையில் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பிற்காக டான் சின் துவான் விருதுகளில் சிறப்பிக்கப்பட்டோரில் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையின் தாதிமை வல்லுநர் வசந்தி கிருஷ்ணனும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் புற்றுநோய் நிலையத் தாதி ரேணுகா நாயர் உள்ளிட்டோர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
எப்போதும் விழிப்புநிலை
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் புற்றுநோய் மையத்தின் ரத்தப் பரிசோதனை அறையில் 52 வயதான திருவாட்டி ரேணுகாவின் பணி, வழக்கமான மேற்பார்வையைத் தாண்டியது.
பெரும்பாலும் புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளை அவர் பராமரித்து வருகிறார். தாம் தாதிமைத் துறைக்கு வரவேண்டும் என்பது தம் தந்தை விரும்பியதாலும் என்ன செய்வதென்று தெரியாததாலும் அத்துறையைத் தேர்ந்தெடுத்ததாக அவர் சொன்னார்.
காலம் செல்ல செல்ல திருவாட்டி ரேணுகாவிற்கு அத்துறையின்மீது ஆர்வம் கூடியது. 28 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அவர், குடும்பத்தினர் தமக்குப் பேராதரவாக இருந்துவருவதாகத் தமிழ் முரசிடம் கூறினார்.
தமது பணியில் ஏராளமான பாடங்களைக் கற்றுக்கொள்வதாகக் கூறினார் திருவாட்டி ரேணுகா. ஒருமுறை, அவசர சிகிச்சை ஒன்றின்போது மருத்துவர் வழங்கிய மருத்துவ உத்தரவில் பிழை இருந்ததைக் கண்டறிந்து, உடனே அதனை அம்மருத்துவரிடம் தாம் சுட்டிக்காட்டியதை அவர் நினைவுகூர்ந்தார்.
தவறுகள் எந்நேரமும் நிகழலாம் என்பதால் வேலையின்போது எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்ற மதிப்புமிக்க பாடத்தை அந்தச் சம்பவம் உணர்த்தியதாகத் திருவாட்டி ரேணுகா குறிப்பிட்டார்.
நேரடி நோயாளிப் பராமரிப்பு மூலமாக மட்டுமல்லாமல், சுகாதாரச் சேவை வழங்கப்படும் முறையையும் மேம்படுத்தி, தாதியர் தங்கள் பணியில் முத்திரை பதிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கருணையுடன் கூடிய வழிகாட்டல்
நோயாளிகளின் பராமரிப்பையும் தாண்டி, இளைய ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை ஊக்குவிப்பது வரை 55 வயது திருவாட்டி வசந்தி கிருஷ்ணனின் பங்களிப்பு நீள்கிறது.
அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் தாதிமை வல்லுநராகப் பணியாற்றும் இவர், பதிவுபெற்ற தாதியரின் அடிப்படைப் பராமரிப்பு உதவியாளர்களுக்கு வழிகாட்டிப் பயிற்சி அளிக்கிறார்.
பள்ளி நாள்களில் திருவாட்டி வசந்தி செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்தபோது, சமூகத்தில் உள்ள மக்களுக்கு அடிப்படை முதலுதவி அளித்து வந்தார். அப்போது ஏற்பட்ட ஆர்வமே அவரைத் தாதிமை துறையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது.
32 ஆண்டுகள் வேலை அனுபவம் கொண்ட அவர், தற்போது எட்டு ஆண்டுகளாக மறுவாழ்வுப் பிரிவில் பணியாற்றி வருகிறார்; இளைய தாதியர்க்குப் பயிற்சி அளிப்பதோடு அவர்களின் மருத்துவத் திறன்களையும் தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவுகிறார்.
“மருத்துவமனையில் எதிர்கொள்ளும் மன அழுத்தந்தரும் சூழ்நிலைகளால் சிலர் அழுகின்றனர். அதனால் உளவியல் ரீதியான ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுடன் பேசவும் அவர்களின் கருத்துகளைக் கேட்கவும் நேரம் ஒதுக்குவேன்,” என்று திருவாட்டி வசந்தி கூறினார்.
விருது பெற்றது மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவதாகக் கூறிய அவர், தாதிமைப் பணி மீதும் நோயாளிகளின் மீதும் உள்ள அக்கறையே இந்த வெற்றிக்கான விதை என்றும் குறிப்பிட்டார்.
