புதிய நாடு, புதிய தடையோட்ட சூழல், மட்டற்ற அனுபவம். சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் சென்ற மாதம் கிரீஸ் நாட்டுக்குச் சென்று, அங்கு நடந்த ‘ஸ்பார்டா ட்ரைஃபெக்டா’ தடையோட்டத்தில் தங்கள் உடல் வலிமையை வெளிப்படுத்தினர்.
ஆனால், அது வழக்கமான தடையோட்டம் போலல்ல. கடுமையான தடைகள் நிறைந்த, சவால்மிக்க மூன்று தடையோட்டங்கள்.
கிரீசின் ஸ்பார்டா நகருக்குப் பயணம் மேற்கொண்ட அவ்விருவர், பந்தயத்தை வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.
இவ்வாண்டு அப்போட்டியில் பங்கேற்க சிங்கப்பூரிலிருந்து கிரீஸ் சென்றவர்கள் அவ்விருவர் மட்டுமே.
தடையோட்டம் தொடங்குவதற்கு முன்னர் அணிவகுப்பில் சிங்கப்பூர்க் கொடியை பறக்கவிட்ட அவர்கள், “எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நாங்கள் இருவரும்தான் இம்முறை சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறோம்,” என்று கூறினர்.
சில நாள் இடைவெளிகளுடன் நடைபெற்ற மூன்று தடையோட்டங்களில் 40 வயது கார்த்திகேசும் அவரது 39 வயது நண்பர் கிரண்நாத் சிங்கும் பல இன்னல்களை சந்தித்தனர்.
முதல்முறையாக கிரீசுக்குச் சென்ற அவர்கள் குளிர்கால சூழலுக்குப் பழகிக்கொள்ள வேண்டியிருந்தது.
மேலும், அங்கு நிலப்பரப்பு சிங்கப்பூரை விட மாறுபட்டு இருந்ததால், ஓடிக்கொண்டு தடைகளை தாண்ட அவர்கள் சிரமப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஏறத்தாழ நான்கு மீட்டர் ஆழம் கொண்ட மிக குளிரான ஆற்றைக் கடந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர்கள், “மொத்தம் இதுபோல 82 தடைகளைக் கடந்தோம்,” என்றனர்.
முதல் நாள் எட்டு கி.மீ. தூரம், இரண்டாவது நாள் 25 கி.மீ., மூன்றாவது நாள் 37 கி.மீ. தூரம் ஓட்டம். அதற்கு அப்பாற்பட்டு ஒன்றின்மேல் ஒன்றாகப் புரட்டிப்போடும் தடைகள்.
பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு தோளோடு தோள் நின்று கார்த்திகேசும் கிரண்நாத்தும் ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்துக்கொண்டனர்
ஒவ்வொரு முறையும் ஒரு தடையை வெற்றிகரமாக கடக்காமல் போகும்போது, அதை விட மேலும் கடினமான பலம் தேவைப்படும் தடையைக் கடக்க வேண்டும்.
இல்லையெனில், ஓட்டத்திலிருந்து வீரர்கள் நீக்கப்படும் அபாயம் நிலவியது.
தடையோட்டத்தில் தங்களால் இயன்றவரை போட்டியிட்டு இறுதிவரை சமாளித்த இருவரும் நாடு திரும்பியபோது பல பாடங்களைக் கற்றனர்.
ஓட்டத்தில் கிடைத்த பாடங்களைக் கற்றுகொண்ட அவர்கள், “ஓட்டத்தை முடித்த பிறகு எங்களுக்குச் சோர்வாக இல்லை. அதை முடித்த நிறைவில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்,” என்று கூறினர்.
ஓராண்டுக்கு முன்னர் தடையோட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட இருவரும் இவ்வாண்டு ஜனவரியில் அதற்குப் பதிவுசெய்து தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்து, கடுமையாக பயிற்சி செய்யத் தொடங்கினர்.
பயிற்சிக்காக நேரம் ஒதுக்கிய இவர்கள், தோழமையுடன் கைகோத்து ஓட்டத்தில் பங்கெடுத்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களான இருவரும், உடற்பயிற்சித் தளத்தில் சந்தித்தனர்.
‘டீம் பிளாக் மாம்பா எஸ்ஜி’ எனும் சமூக உடற்பயிற்சிக் குழுமத்தில் உறுப்பினர்களாக இவர்கள் உள்ளனர்.
பலவகை உடற்பயிற்சிகள் இருந்தாலும், கார்த்திகேசு தடை பயிற்சி கலந்த உடற்பயிற்சியில் ஈர்க்கப்பட்டார்.
அது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பது, சிறு வயதில் விளையாட்டு மைதானத்திற்குச் சென்றால், ‘மங்கி பார்’ கம்பிகளைக் கடப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வந்த கார்திகேசு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘ஸ்பார்ட்டன்’ எனப்படும் உடற்பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கினார்.
ஒருவரின் உடல் மற்றும் தசை வலிமை, சகிப்புத்தன்மை போன்றவற்றை மேம்படுத்தும் உடற்பயிற்சி வகையான ‘ஸ்பார்ட்டன்’ மீது கார்த்திகேசுக்கு மோகம் ஏற்பட தொடங்கியது. ‘ஓப்ஸ்டாக்கல் கோர்ஸ் ரேசிங்’ எனும் தடையோட்டத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அடிக்கடி பயிற்சியில் ஈடுபட்டு வரும் கார்த்திகேசு, “இது வித்தியாசமான உடற்பயிற்சி முறை. எனக்கு மிகவும் பிடித்துள்ளது,” என்றார்.
தனது வாழ்க்கை முழுவதும் மெதுவோட்டத்தில் ஈடுபட்டு வந்த கிரண்நாத்துக்கு சிறிதுகாலம் கழித்து, அதன் மேல் சலிப்பு தட்டத் தொடங்கியது.
வித்தியாசமாக ஏதாவது செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்த இவருக்கு ‘டீம் பிளாக் மாம்பா எஸ்ஜி’ பற்றி தெரியவந்தது.
அதில் சேர்ந்த பிறகு, அவர் கார்த்திகேசு போன்ற பல நண்பர்களைச் சந்தித்து அவர்களுடன் ஒன்றிணைந்து உடற்பயிற்சியில் கலந்துகொள்ள ஊக்கமடைந்தார்.
அந்தக் குழுமத்தில் கார்த்திகேசு, கிரண்நாத் போல பல ஆண்களும் பெண்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
பொதுமக்கள் இலவசமாக அதில் சேர்ந்து சமூகத்தில் இடம்பெறும் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.
ஒவ்வொரு வாரமும் மேக்ரிச்சி நீர்த்தேக்கத்தில் இவர்கள் குறைந்தபட்சம் 10 கி.மீ. தூரம் மெதுவோட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
திருமணமான கார்த்திகேசுக்கும் கிரண்நாத்துக்கும் இருவரின் துணைவியர்கள் பக்கத்திலிருந்து அவர்களின் உடற்பயிற்சி பயணத்தில் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.
12, 9 வயதுகளில் இரண்டு ஆண் பிள்ளைகளுக்குத் தந்தையான கிரண்நாத், “என்னுடைய இரு மகன்களையும் நான் தடையோட்டத்துக்கு அறிமுகம் செய்துள்ளேன்.
அவர்களும் என்னைப்போல் அதில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.
தனியார் பொறியியல் நிறுவனத்தில் பணியாற்றும் கிரண்நாத்துக்கும் அரசாங்க சேவையில் பணியாற்றும் கார்த்திகேசுக்கும் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் நேரத்தை நன்கு வகுத்து தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.
“உடற்பயிற்சியில் ஈடுபடும்போது தேவையற்ற விஷயங்களில் நேரம் செலவிடுகிறோம் என்ற எண்ணம் எழும் வாய்ப்புகள் குறைவு. அர்த்தமுள்ள வழியில் நேரம் செலவிடுவதால் நிறைவாக உள்ளது,” என்று கூறினர்.
பயிற்சிக்காக சிலமுறை மலேசியா சென்ற இருவரும் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் போன்ற இதர நாடுகளிலும் தடையோட்டங்களில் பங்கேற்றனர்.
கிரீஸில் நடைபெற்ற தடையோட்டத்துக்குப் பிறகு கிரண்நாத் அங்கு ஐந்து நாள்கள் தங்கி நாட்டை சுற்றிப் பார்த்தார்.
அங்குள்ள ஆக உயரமான மலையான ‘ஒலிம்பஸ்’ மலையை எப்படியாவது ஏறிவிட வேண்டுமென்ற தீவிரத்தில் இருந்த இவர், “நான் அந்த மலையில் ஏறிய அனுபவத்தை மறக்கமாட்டேன். கிரீஸ் மிகவும் எழில்மிக்க ஒரு நாடு. அந்நாட்டு உணவு ருசியாக இருந்தது,” என்று சொன்னார்.
சாகசமிக்க உடற்பயிற்சிகளில் ஈடுபட முனைப்பு காட்டிவரும் இருவரும் இனி அடுத்தாண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் தடையோட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் உள்ளனர்.