சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) ‘ஸ்டெப்’ துணைப்பாட வகுப்புத் திட்டத்தில் சேர்ந்துள்ள உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், கற்றல் என்பது வகுப்பறையோடு நின்றுவிடாது என்பதைக் காற்பந்து மூலம் நிரூபித்துள்ளனர்.
சிண்டாவும் சிங்கப்பூர் இந்தியர் சங்கமும் இணைந்து இரண்டாவது ஆண்டாக சனிக்கிழமை (மே 25) ‘ஸ்டெப்’ ஃபுட்சல் கிண்ணப் போட்டியை நடத்தின. சிங்கப்பூர் இந்தியர் சங்க ஃபுட்சல் திடலில் போட்டி நடைபெற்றது.
ஆண்டுதோறும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய இரு அமைப்புகளும் சென்ற ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இப்போட்டி நடைபெறுகிறது.
முதன்முறையாக இப்போட்டியில் பெண்களும் பங்குபெற்றனர். அறுபது பெண்கள் பத்து அணிகளில் விளையாடினர். மொத்தம் 17 ஸ்டெப் துணைப்பாட நிலையங்களிலிருந்து 35 அணிகளில் 210 மாணவர்கள் பங்கெடுத்தனர்.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம்.
“காற்பந்தை மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள்தான் விளையாடவேண்டும் என எண்ணக்கூடாது. விளையாட ஆசைப்பட்டால் விளையாடவேண்டும். அதற்கு சிண்டா இதுபோன்ற தளங்களை ஏற்படுத்தித் தருகிறது.
“குழுவுணர்வு போன்ற திறன்களே எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு அடித்தளம். இத்திறன்களை வளர்க்க காற்பந்து துணைபுரிகிறது,” என்றார் சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன்.
சிண்டாவின் நிர்வாகச் செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஹமீத் ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தலைவர் தமிழ் மாறன், சிண்டா இயக்குநர் ஷரீன் ஃபர்சானா அவருடன் இணைந்து பரிசுகளை வழங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
“இன்று உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை நீங்கள் உங்கள் குரலில் கூறியதைக் கேட்டு மனங்குளிர்ந்தேன்,” என மாணவர்களைப் பாராட்டினார் டாக்டர் ஹமீத்.
விறுவிறுப்பாக நடந்த போட்டிகள் இறுதிச்சுற்றை நெருங்கியபோது மழை குறுக்கிட்டது.
அதனால் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற ஆண் அணிகள் மொத்த கோல் எண்ணிக்கை அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டன. இறுதிச்சுற்று, மூன்றாம் நான்காம் நிலைக்குத் தகுதிபெற்ற பெண் அணிகளும் ஒன்றோடொன்று ஒப்பிடப்பட்டன.
அவ்வகையில் பெண்கள் பிரிவில் முதல் நிலையில் உட்லண்ட்ஸ் ரிங், இரண்டாவதாக கிளமெண்டி, மூன்றாவதாக வெஸ்ட் குரோவ், நான்காவதாக சிராங்கூன் கார்டன்ஸ் ஆகிய ஸ்டெப் நிலையங்கள் வெற்றிபெற்றன.
ஆண்கள் பிரிவில் வாகைசூடியது யாங்செங் ஸ்டெப் நிலைய ‘ஏ’ அணி. இரண்டாம் நிலையில் சூச்சின், மூன்றாம் நிலையில் சிராங்கூன் கார்டன்ஸ், நான்காம் நிலையில் உட்லண்ட்ஸ் ஆகிய ஸ்டெப் நிலைய ‘ஏ’ அணிகள் வெற்றிபெற்றன.
பங்குபெற்றோர் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
“கடின உழைப்பும் குழு ஒற்றுமையும் மிக முக்கியம் என இப்போட்டியில் கற்றுக்கொண்டேன்,” என்றார் ஃபூச்சுன் ஸ்டெப் நிலையத்தில் ஆறு ஆண்டுகளாகப் பயின்றுவரும் அனுஷ்கா பார்த்திபன், 13.
“விளையாட்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்பட்டனர்,” எனப் பாராட்டினார் யூனிட்டி ஸ்டெப் நிலைய ஆசிரியர் ஆண்ட்ரூ சபாரத்தினம், 64.

