கருணைக் கைகளுக்கு அங்கீகாரம்

2 mins read
05566df2-2d34-4bc3-88f6-aa095eb9b365
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணையமைச்சர் தினேஷ் வாசு தாசிடமிருந்து விருதுபெறும் பத்மினி சதிமுருகன் (வலமிருந்து மூன்றாவது). - படம்: சுந்தர நடராஜ்

வில்லேஜ் ஹோட்டல் ஆல்பர்ட் கோர்ட் விடுதியில் தங்கிய விருந்தினர் ஒருவர், ஒருமுறை விடுதிக்கு வெளியே விழுந்து பலத்த காயத்துடன் திரும்பினார்.

அப்போது, விடுதியின் விருந்தினர் சேவைகளுக்கான நிர்வாகியாகப் பணிபுரிந்த பத்மினி சதிமுருகன், 30, உடனடியாக அவருக்கு உதவ விரைந்தார்.

“காயம்பட்ட விருந்தினர் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தவித்தார்,” என்று தமிழ் முரசிடம் நினைவுகூர்ந்தார் பத்மினி.

விருந்தினரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததிலிருந்து அவர் விடுதிக்குத் திரும்பிய பின்னரும் அவருடைய உடல்நிலையை அவ்வப்போது அறிந்து, பத்மினி தமது விருந்தினரின் நலத்தை உறுதிசெய்தார்.

விடுதிவாசத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட அந்த விருந்தினர், பத்மினியின் பரிவைப் பற்றி ஒரு கடிதம் எழுதினார். அவரது செய்கை பத்மினியை உணர்ச்சிவசப்பட வைத்தது.

“இந்தத் துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்துவரும் நிலையில் அது மறக்கமுடியாத ஒரு சம்பவம்,” என்றார் பதமினி.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற உன்னத சேவைக்கான தங்க விருது நிகழ்ச்சியில் பத்மினி விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

‘டிரிப் அட்வைசர்’ மதிப்புரைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும் பத்மினி, தமது சகாக்களால் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட சேவையாளராகச் சிறப்பிக்கப்பட்டார்.

“இந்தத் துறையில் இருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை,” என்றார் பத்மினி.

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிறந்து, கோலாலம்பூரில் சேவைத்துறையில் பட்டப்படிப்பை முடித்த பத்மினி, தொடக்கத்தில் ஒரு விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என விரும்பினார்.

“ஒரு விமானப் பணிப்பெண்ணாவதற்கு நிறைய தகுதிகள் தேவைப்பட்டதால் எனக்குச் சற்று சவாலாக இருந்தது,” என்று அவர் சொன்னார்.

பலதரப்பட்ட மக்களுடன் உரையாடி, அவர்களுக்கு உதவ விரும்பிய பத்மினி, இறுதியில் ஹோட்டல் துறையில் காலெடுத்து வைத்தார்.

பல நாடுகளிலிருந்து வருவோர்க்குச் சரியான விருந்தோம்பலை அளிக்க வேண்டும் என்பதே இவரது கொள்கை.

“எங்களைப் போன்ற சேவை ஊழியர்களுக்கு ஆர்வமும் பொறுமையும் முக்கியம்,” என்கிறார் இவர்.

இந்தப் பணி அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மறையான விளைவை ‌ஏற்படுத்தியது.

பினாங்கில் முதன்முதலில் வேலை செய்யத் தொடங்கியபோது சேவைத் துறை மூலம் தம் கணவரைச் சந்தித்ததாகத் தெரிவித்தார் பத்மினி.

கிட்டத்தட்ட எட்டாண்டுகளாகக் காதலித்த இருவரும் ஒவ்வொருவரின் பணிகளைப் பற்றியும் நன்கு அறிந்துகொள்ளவே, அவர்களுக்குள் ஆழமான புரிந்துணர்வு ஏற்பட்டது.

ஹோட்டல் துறையில் வேலை செய்வது ஒரு பெண்ணுக்கு ஏற்றதாக இராது என்று கூறி, தம்மைப் பலரும் தடுக்க முயன்றதாகக் கூறினார் பத்மினி.

“ஆனால், நான் இந்தத் துறையில் வேலை செய்வதில் மிகவும் உறுதியாக இருந்தேன்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்