மனநலன் காக்கும் குடும்பப் பிணைப்பு

3 mins read
97965229-ce04-48cd-b1da-31dc09ec054f
படம்: - இணையம்

சிங்கப்பூரில் பரபரப்பான வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆண்டின் தொடக்கம் முதல் இறுதிவரை, கடின உழைப்பும் இலக்குகளை அடைவதற்கான ஓட்டமுமே நம் வாழ்க்கையாகிவிடுகிறது. ஆண்டு முடிந்து, விடுமுறைக் காலம் வரும்போது, சிறிது நேரம் ஒதுக்கிக் குடும்பத்துடன் ஒன்றிணைந்து, இனிமையான தருணங்களைப் பகிர்ந்துகொள்வது மிக அவசியம். 

டிசம்பர் மாதத்தின் இந்த விடுமுறைக் காலம், உழைப்பிற்குப் பின் ஓய்வு எடுப்பதற்கும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் கிடைத்த பொன்னான வாய்ப்பாகும். சிங்கப்பூர் போன்ற அதிவேக நாட்டில், நேரமென்பது சொற்பமானது. இந்த ஓட்டத்தின் காரணமாக, குடும்பத்துடன் செலவிட வேண்டிய தரமான நேரத்தை நாம் இழந்துவிடுவது பெரும்பாலும் உண்மையே. நாம் உணர்வதற்கு முன்பே, பிள்ளைகள் வளர்ந்து, ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குச் சென்றுவிடுவதைக் காணமுடிகிறது. 

பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடும்போது, அழகான நினைவுகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி, எதிர்காலத் தலைமுறையினருக்குத் தேவையான மனோதிடத்தையும் அளிக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுடன் ஆழ்ந்த பிணைப்பை ஏற்படுத்தினால், பிள்ளைகள் தன்னம்பிக்கையும் சவால்களைத் திறம்படச் சந்திக்கும் தைரியமும் கொண்டவர்களாக வளர்வார்கள்.

இந்த விடுமுறையில், உங்கள் பிள்ளைகளை வெளியே அழைத்துச் சென்று, புதிய அனுபவங்களைப் பெற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இவைதான் அவர்களுக்குச் சிறந்த நேர்மறை நினைவுகளாக மனதில் பதியும்.

வெளிநாடுகளுக்குச் சென்று சில நாள்களைச் செலவிடுவது அல்லது சிங்கப்பூரின் அருமையான சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்வது அல்லது உள்ளூர் விடுதிகளிலேயே சில நாள் பொழுதைக் கழிப்பது போன்ற செயல்களால், பிணைப்பை மேலும் வலுப்படுத்த முடியும். ஒரு குடும்பமாக இணைந்து சமைத்தல், விளையாடுதல் அல்லது மாலை நேரங்களில் சேர்ந்து நடப்பது போன்ற எளிமையான செயல்கள்கூட நீண்ட காலத்திற்கு நீடிக்கும் சிறந்த நினைவுகளை உருவாக்கும்.

சிங்கப்பூரில் குடும்பத்தோடு செல்லப் பல இடங்கள் உள்ளன. உதாரணமாக, கரையோரப் பூந்தோட்டம், செந்தோசா தீவு, மண்டாய் வனவிலங்குக் காப்பகம், கலை அறிவியல் அரும்பொருளகம், சிங்கப்பூர் அறிவியல் நிலையம் எனச் சில இடங்களைக் குறிப்பிடலாம்.

அதனையும் தாண்டி, ஒவ்வொரு வீடமைப்புப் பேட்டைகளிலும் பரந்த நடைபாதைகள், உடற்பயிற்சி நிலையங்கள், விளையாட்டுக் கூடங்கள் என உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் நேரத்தைக் கழிக்கப் பல இடங்கள் உள்ளன.  இவை அனைத்தும் குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சியை அளிக்கும் இடங்களாகும்.

சிங்கப்பூரில் தேசிய அளவிலும் சமூக அமைப்புகளின் வழியும் அனைவரும் பங்கேற்கும் நடைப்போட்டிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் எனப் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பங்கேற்பதன் மூலம் குடும்பப் பிணைப்பு வலுவடைவதுடன் சிங்கப்பூரில் வாழும் அனைவருடனும் பழகும் வாய்ப்பும் கிடைக்கிறது. 

குடும்பத்துடன் தரமான நேரத்தைச் செலவிட வேண்டும். நீங்கள் பிள்ளைகளுடனும் மற்ற குடும்பத்தாருடனும் இருக்கும்போது, உங்கள் கைப்பேசிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உரையாடலை ஊக்குவியுங்கள். அவர்களோடு பள்ளி, நண்பர்கள், அலுவலகச் சூழ்நிலை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்காலக் கனவுகள் குறித்துப் பேசும்போது உறவு வலுப்பெறுகிறது. 

குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள நல்ல உறவு, நம் மன ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்கிறது. மன அமைதி சிறப்பாக இருந்தால், அது தானாகவே சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இன்றைய காலகட்டத்தில், தொலைபேசிகளிலும் சமூக ஊடகங்களிலும் செலவிடும் நேரம் அதிகரித்து, குடும்ப உறவுகளை வலுப்படுத்த நாம் முதலீடு செய்யக்கூடிய முக்கிய நேரத்தை முடக்குகிறது.

இழந்த நேரம் ஒருபோதும் திரும்பி வராது. திரைகளிலிருந்தும் அன்றாட வேலைகளின் பரபரப்பிலிருந்தும் விடுபட்டு, உங்கள் அன்புக்கும் அரவணைப்புக்கும் தகுதியானவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுங்கள். இந்த விடுமுறை உங்களின் குடும்பப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத் தலைமுறையினர் உறுதிமிக்கவர்களாக வளர அடித்தளம் இடட்டும்.

குறிப்புச் சொற்கள்