சொல்லொண்ணாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது தமிழ்நாட்டின் கரூரில் 41 உயிர்களைக் காவுகொடுத்த நேர்வு!
குடும்பத்திற்காக, சமூகத்திற்காக, நாட்டிற்காகக் கொடுக்கப்பட்ட விலையன்று அது. தனிமனித வழிபாடு அதற்கொரு காரணமாக இருக்கும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
காட்சியாளர்களை ஆட்சியாளர்களாகக் காணத் துடிப்பதால் நிகழ்ந்த துன்பம்! கூத்தர்கள்மீது பித்தர்களாக இருப்பதால் ஏற்பட்ட இழப்பு! திரையில் தோன்றும் நிழல்களை மெய்யென எண்ணுவதால் நேர்ந்த இன்னல்! தம் வாழ்க்கையில் வறியராக இருந்தாலும் திரைக்கலைஞர்கள்மீது வெறியராக இருப்பதால் விளைந்த தீமை!
அவரவர்க்குப் பிடித்த ஆளுமைகள், திரையுலக, விளையாட்டு நட்சத்திரங்கள்மீது பேரன்பு செலுத்துவது என்பது இயல்புதான். ஆனால், அந்த அன்பு வெறியாகி, வழிபாடாக மாறும்போதுதான் சிக்கல்.
இவ்வாண்டு ஜூன் மாதம் பெங்களூரில் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 உயிர்களைப் பறிகொடுத்ததே ஆறா வடுவாகிவிட்ட நிலையில், அண்மையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் கரூர் பரப்புரைக் கூட்டத்தின்போது 41 உயிர்களை இழந்தது இன்னொரு பெருந்துயர்.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போதெல்லாம், ஒருவர் தனது கல்வி, வேலை, குடும்பப் பொறுப்பு ஆகியவைகளைக் கருத்தில்கொள்ளாது, சமூக நிலையைப் புறந்தள்ளிவிட்டு, பெரும்பதாகை வைத்து, பாலூற்றி வழிபாடு செய்வது வாடிக்கையாகிவிட்டது.
திரை பிம்பங்களின் மீதான இம்மோகம், வெறும் பொருளியல் சீரழிவோடு நின்றுவிடுவதில்லை. நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே மோதல், திரையரங்குச் சொத்துகளைச் சேதப்படுத்துதல், படங்கள் குறித்து எதிர்மறைக் கருத்துகளைப் பதிவிட்டால் அச்சுறுத்தல் விடுத்தல் போன்றவை அரங்கேறுகின்றன.
இந்த மோசமான செயல்கள், இந்தியாவோடு நின்றுவிடாது அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினரிடத்திலும் தலைதூக்கி வருவது கவலையளிக்கிறது.
சிங்கப்பூரிலும் முதல் நாள், முதல் காட்சிக்காக ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம், முழுத் திரையரங்கையும் தம்வசப்படுத்தி, திரைப்படத்தின்போது கூச்சல் கூப்பாடுகள் பெருகி வருகின்றன. நடிகர், பாடகர் நேரடி நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனாலும், சமூக ஊடகங்களின் ஊடுருவலாலும், தமிழ் இளையர்கள் மத்தியில் சினிமாவின் தாக்கம் வெளிப்படையாய்த் தெரிகின்றன. தேசிய ஊடகங்கள் உட்பட பலரும் இத்தீயை விசிறிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் லண்டனில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களின் கட்டுக்கடங்கா நடத்தையினால் திரைப்படம் நிறுத்தப்பட்டது.
இத்தகைய நிகழ்வுகள், தனியொருவர்மீது மட்டுமன்றி, இந்தியச் சமூகத்தின்மீதும் எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த அவலப்போக்கின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அதுபோல, தலைவர்கள் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்புவதும் அவர்கள் செய்வதையெல்லாம் நியாயப்படுத்திப் பேசுவதும் எடுத்துக்காட்டுகளாக மாறி, அடுத்த தலைமுறையினர் அவற்றைச் சரியெனக் கருதும்படி செய்வதாகிவிடும்.
தலைவர்களை ‘கடவுள்’ நிலைக்கு உயர்த்திவிட்டால் அவர்களிடம் கேள்வியெழுப்பும் உரிமை, மழுங்கடிக்கப்படுகின்றன. தலைமைத்துவத்திற்கு உண்மையாய் இருக்கிறோம் எனும் மூட நம்பிக்கையில் தமது சிந்தனைத்திறனை அடகுவைத்துவிடுகிறார்கள் பலர். தலைவர்கள் தவறிழைத்தாலும் அதனைச் சுட்டிக்காட்டாமல் ஊமையாகிப் போகிறார்கள்.
தலைவர்களும் நட்சத்திரங்களும் தங்கள் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டியது அவசியம். உண்மையில், தலைவர்களே பெருந்தொண்டர்களாக இருக்க வேண்டும். அதுவே, நல்ல தலைவர்களுக்கான அடையாளம். அத்தகையோரால்தான் ஆற்றல்மிகு சமூகத்தை உருவாக்க முடியும்.
எத்துறையிலும் சாதனையாளர்களாக இருப்போரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வழிகளை அடிக்கல்லாக்கி நாமும் முன்னேறத் தலைப்பட வேண்டுமேயன்றி, அவர்களின் முன்னேற்றத்திற்காக நம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ளலாகாது.
அகவாழ்வெனினும் புறவுலகெனினும் அறத்தைப் போதிப்பதையே நோக்கமாகக் கொண்ட பண்டைய இலக்கியங்களைப் பெருஞ்சொத்துகளாகக் கொண்ட தமிழினம், தன்மான இயக்கத்தைத் தழைத்தோங்கச் செய்த நம்குலம், அறநெறி பிறழ்ந்து, தரம் தாழ்ந்து, இழிநிலைக்குச் சென்றுவிடலாகாது.
சிறு அமைப்பென்றாலும் சரி, பேரியக்கமென்றாலும் சரி, தலைமைப் பதவிகளில் இருப்போரைத் துதிபாடாது, தனிமனித வழிபாடு தவிர்த்து, அறம் சார்ந்த பண்பாட்டை வாழ்க்கைநெறியாகக் கொண்டு, முன்னேற்றத்தை மனத்திற்கொண்டு, தன்மதிப்பை இழக்காது நேரிய வழியில் சீரிய வாழ்வு வாழ்வோம்.
கணியன் பூங்குன்றனார் தம் புறநானூற்றுச் செய்யுளில் சொல்வதுபோல, பெரியோரை வியத்தலும் இலமே!