பணிகளைப் பாதுகாக்க வேலையிட மறுசீரமைப்பு அவசியம்

பணிகளைப் பாதுகாக்க வேலையிட மறுசீரமைப்பு அவசியம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Oct 2026 - 5:30 am

3 mins read

அண்மைக் காலமாகப் பொருளியல் மாற்றங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கைகள், தொழில்நுட்ப ஊடுருவல் ஆகியவற்றின் காரணமாக, ஊழியர்களைப் பாதுகாப்பது குறித்த விவாதங்கள் புதிய எல்லையை எட்டியுள்ளன.

பணிநீக்கப் பலன்கள், இழப்பீடுகளை உறுதிசெய்வது மட்டுமன்றி, ஆட்குறைப்புக்கு ஆளாகும் ஊழியர்களுக்கும் புதிதாகப் பட்டப்படிப்பை முடித்து வெளியே வரும் இளையர்க்கும் புதிய வேலைவாய்ப்புகளை உடனடியாக உறுதிசெய்து தருவதே தற்போதைய முக்கியச் சவாலாக உருவெடுத்துள்ளது. பணிநீக்க விகிதம், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 10,000 ஊழியர்களுக்கு 16 பேர் என்று இருந்தது. இரண்டாம் காலாண்டில் அது 10,000 ஊழியர்களுக்கு 20 பேர் எனக் கூடியது. உற்பத்தி, தகவல் தொடர்பு, நிதிச் சேவை போன்ற வெளிநாடுகளை நோக்கிய துறைகளில் ஏற்பட்ட வணிக மறுசீரமைப்பும் மறுவடிவமைப்பும் இந்த ஆட்குறைப்பு அதிகரிப்பிற்கு மூல காரணம்.

இருப்பினும், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த வேலைவாய்ப்பு 11,400ஆக அதிகரித்தது. இது 19வது காலாண்டாகத் தொடர்ந்து வளர்ச்சிகண்டு வருகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டோருக்குத் திறனுக்கேற்ற வேலைவாய்ப்பு அமைவதில் சற்றுத் தாமதம். திறன் மேப்பாட்டிற்கும் அவகாசம் தேவைப்படுகிறது.

வேலைவாய்ப்புச் சூழல்

செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீனத் தொழில்நுட்பங்கள் வேலை செய்யும் முறைகளை மிகவேகமாக மாற்றி வருகின்றன. சேவைத்துறையில் பல பணிகளைச் செயற்கை நுண்ணறிவே மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதை இவ்வாண்டு மே தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் சுட்டிக்காட்டினார்.

உற்பத்தித்திறனை உயர்த்துவதுடன் நின்றுவிடாமல் ஒட்டுமொத்தத் தொழில்துறையின் இயக்கத்திலும் தொழில்நுட்பம், மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில், ‘வேலைகளுக்கான முத்தரப்பு மன்றம்’ போன்ற அமைப்புகள் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே புதிய வாய்ப்புகளை உருவாக்கத் துரிதமாகச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

இதற்கு உறுதுணையாக, வேலை இழந்தவர்களை வேறொரு பணியில் அமர்த்த மனிதவள அமைச்சும் புதிதாக நிறுவப்பட்ட திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பும் பெருமுயற்சிகளை எடுத்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிக்குச் செல்வதும் அவரவர் துறையில் அன்றாடப் பணிகளில் செயல்படுத்தப்படும் புதிய மென்பொருள்கள், பகுப்பாய்வுகள், உத்திகள் முதலியவற்றைக் கற்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும் நம் உற்பத்தித்திறன் குறையாதிருக்க வகை செய்யும்.

அரசின் உத்தரவாதம்

ஒவ்வொரு வேலையையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் ஒவ்வொரு மனிதரையும் ஊழியரையும் பாதுகாப்போம் என்ற அரசின் உத்தரவாதம் ஊழியர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இருப்பினும், ஆட்குறைப்பு விகிதங்கள் வழக்கமான வரம்பைத் தாண்டும் சூழலில் தொடர்ந்து வேலை இருக்குமா எனும் அச்சம் ஊழியர்களிடையே இருப்பது இயற்கையே.

முத்தரப்பு வழிகாட்டிகளுக்கு அப்பால், ஊழியர்களுக்குப் பணிநீக்கப் பாதுகாப்புகளையும் விரைவான வேலைவாய்ப்பு மறுசீரமைப்புகளையும் சட்டதிட்டங்களின்படி நடைமுறைப்படுத்துவது அனைத்துத் தரப்பினரின் பணியாகிறது. 

திறன் மேம்பாடு

வேலை இழக்க நேரிடும் ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்வதற்கும் இளையர் தொடக்கநிலை வேலைகளைப் பெறுவதற்கும் முறையான பயில்நிலைப் பயிற்சிகளும் திறன்பயிற்சிகளும் இன்றியமையாதவை. பல ஆண்டுக்காலம் இருந்த பணியில், கற்றுக்கொள்ள வேண்டியதோ, தெரியவேண்டியதோ ஏதுமில்லை என இறுமாப்போடு இருப்பின், உலகமே முன்செல்ல நாம் பின்தங்கி விடுவோம்.

குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் படிப்பதோ, புதிய வித்தைகளைக் கற்றுக்கொள்வதோ சிரமம்தான். ஆனால், முயற்சி திருவினையாக்கும். வேலையிடத்தில் இளையராக இருக்கும் சக ஊழியர்களுக்கு ஈடுகொடுத்து நிற்கவேண்டுமெனில், புதிதாய்க் கற்க வேண்டும், தேர வேண்டும். அனுபவம் ஓரளவிற்கு நம்மைக் காக்கும். புது அனுபவங்களைத் தேடிக்கொள்வதே புத்திசாலித்தனம்.

சீரிய நோக்கம்

இந்த நேரத்தில், அரசாங்கக் கொள்கைகள், கல்வி நிலையங்களில் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள், மறுபயிற்சிக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள், வெற்றிபெற வேண்டும் எனும் தனிமனித வேட்கை, இவை அனைத்தும் சீரிய நோக்குடன் ஒரு திக்கில் செல்ல வேண்டும். 

அப்போதுதான் நிலையான, வலுவான சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வேலையிடம்வேலைபாதுகாப்புபணிமறுசீரமைப்புமனிதவள அமைச்சுஆய்வுஇளையர்வேலைவாய்ப்பு