புதுடெல்லி: வெளிநாட்டில் இருந்து செயல்பட்டு, இணைய மோசடி மூலம் இந்திய மக்களிடம் ஏறக்குறைய ரூ.1,000 கோடி வரை மோசடி அரங்கேறி உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, நான்கு சீனர்கள் உட்பட மொத்தம் 17 பேர் மீதும் 58 நிறுவனங்கள் மீதும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த மோசடிக்கு 111 போலி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மக்களிடம் ஏமாற்றிப் பறித்த பணத்தை மாற்றுவதற்கு மொத்தம் 58 நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளன.
இந்த மோசடிக் கும்பல் ரூ.1,000 கோடி வரை பணத்தைப் பரிமாற்றம் செய்திருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஒரே ஒரு வங்கிக் கணக்கிற்கு மட்டும் ரூ.152 கோடிக்கும் மேல் பணம் மாற்றப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றிய முறை
பொதுமக்களிடம் பணத்தைக் கொள்ளையடிக்க, மோசடிக் கும்பல் பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளது.
ஆர்வமூட்டும் பொன்ஸி உள்ளிட்ட முதலீட்டுத் திட்டங்கள், பகுதிநேர வேலை வாய்ப்புகள், இணைய விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதிப்பது உள்ளிட்ட பலவிதமான முறைகளில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஷெல் நிறுவனங்கள் என்பவை, இல்லாத நபர்களின் பெயரில் போலியான ஆவணங்களுடன் இயங்குபவை. அவற்றின் முகவரிகளும் பொய்யாக இருக்கும்.
சட்டபூர்வ நிறுவனம் போல் பல நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டாலும், உண்மையில் அத்தகைய நிறுவனம் அங்கு இருக்காது.
இந்த ஷெல் நிறுவனங்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு, மோசடிப் பணம் இந்தக் கணக்குகளுக்கு வந்து, அங்கிருந்து மோசடியாளர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஷெல் கம்பெனிகள் அனைத்தும், சீனாவைச் சேர்ந்த நான்கு நபர்களால் ஒட்டுமொத்தமாக இயக்கப்பட்டு வந்துள்ளன.
சீனர்களின் இந்தியக் கூட்டாளிகள், சந்தேகமே இல்லாத நபர்களிடம் இருந்து அடையாள ஆவணங்களைப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி போலியான நிறுவனங்களின் வலையமைப்பை உருவாக்கி, மோசடிப் பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.

