கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி; ஆந்திராவில் சோகம்

கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி; ஆந்திராவில் சோகம்

படம்: ஊடகம்

01 Nov 2025 - 9:59 pm

2 mins read

அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இக்கோவிலில் ஏகாதசி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (நவம்பர் 1) சிறப்புப் பூசைகள் நடைபெறும் என்பதால் அதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர்.

இந்நிலையில், திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் நெரிசலில் சிக்கியதால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த திடீர் சம்பவத்தில் 10 பேர் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் துயரச் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்தத் துயரச் சம்பவத்தில் பக்தர்களின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிவாரணப் பணிகளை வேகமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பத்து பேர் குடும்பத்தாருக்கு, தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஆந்திராகோவில்கூட்ட நெரிசல்உயிரிழப்புநிவாரணம்