புதுடெல்லி: கழிப்பறைகள் பெண்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு சமூக அளவுகளில் பொறுப்பான கழிப்பறை பயன்பாடு, சுகாதாரப் பழக்கங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மூன்று நாள் உலக கழிப்பறை உச்ச நிலை மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய வீட்டு வசதித்துறை அமைச்சர் மனோகர் லால், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கழிப்பறை கட்டுமானம் பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு, பெருமை மற்றும் கௌரவத்தை வலுப்படுத்தி உள்ளதாகவும் சுத்தமான, பாதுகாப்பான கழிப்பறைகள் கிடைப்பதன் மூலம் வயிற்றுப்போக்கால் ஏற்படும் வருடாந்திர இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோகர் லால் தெரிவித்தார்.
‘நல் சே ஜல்’ திட்டத்தின்கீழ் 15 கோடி வீடுகளுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதாகவும் நீர் விநியோக அமைப்பில் எந்த முறைகேடுகளையும் அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பதாகவும் மாநாட்டில் பேசிய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வீட்டிலும் நல்ல தரமான தண்ணீர் வழங்குவதை நோக்கி அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

