கிர்கிஸ்தானில் சிக்கித் தவிக்கும் 12 இந்திய ஊழியர்கள்: மீட்க உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை

2 mins read
ecb7ce49-5dfa-4d2d-8ae3-7aef93967e9d
கிர்கிஸ்தானில் சிக்கியுள்ள ஊழியர்கள் துன்புறுத்தப்படுவதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். - படம்: ஏஎஃப்பி

உத்தரப் பிரதேசம்: கிர்கிஸ்தானில் இந்தியாவைச் சேர்ந்த 12 ஊழியர்கள் சிக்கிக்கொண்டதன் தொடர்பில், பிலிபிட் மாவட்ட நிர்வாகம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 12 பேரும் கிர்கிஸ்தானில் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுகுறித்த விவரங்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) வெளியிட்டனர்.

உள்துறை அமைச்சு, அந்த விவகாரம் பற்றிய விவரங்களைப் பெறுவதற்கு விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதாக மாவட்ட நீதிபதி கியானேந்திர சிங் கூறினார்.

“கிர்கிஸ்தானில் சிக்கியிருக்கும் 12 பேரின் விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அவர்களைப் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள அவை அனைத்தும் அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன,” என்றார் அவர்.

ஆடவர்கள் அனைவரும் அங்குத் துன்புறுத்தப்படுவதாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர்களைத் தாயகத்திற்குத் திருப்பி அழைத்துவர உள்ளூர் முகவர்கள் 2 லட்ச ரூபாய் வரை கேட்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஊழியர்களும் தங்களை மீட்குமாறு வேண்டுகோள் விடுக்கும் காணொளிகளைக் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளனர்.

குடும்பத்தினரும் உறவினர்களும் உதவி கேட்டு காவல்துறையினரையும் நிர்வாக அதிகாரிகளையும் அடிக்கடி நாடுகின்றனர்.

ஒவ்வோர் ஊழியரும் 2.5 லட்ச ரூபாய் கொடுத்ததாகத் தெரிகிறது. அவர்கள் 59 நாள் விசாவில் அங்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.

வெவ்வேறு நகரங்களில் ஊழியர்கள் வேலைக்கு அனுப்பப்பட்டதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். முறையான உணவு கொடுக்கப்படவில்லை என்றும் தாயகம் திரும்ப ஊழியர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

ஊழியர்கள், விலங்குகளைவிட மோசமாய் நடத்தப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்