இந்தியா-ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள்

2 mins read
3e77072e-4d59-4fa9-983a-82f540be9c2e
மாநாட்டுக்குப் பின்னர் பிரதமர் மோடியும் அதிபர் புட்டினும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்துப் பேசினர். - படம்: பிஐபி

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் புட்டினின் இந்தியப் பயணத்தின்போது 16 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுடெல்லியில் 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சநிலை மாநாடு நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு, வர்த்தகம், பொருளியல், சுகாதாரம், கல்வி, கலாசாரம், ஊடகம் போன்ற துறைகளில் இருதரப்பும் உடன்பாடு கண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

மாநாட்டுக்குப் பின்னர் பிரதமர் மோடியும் அதிபர் புட்டினும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, இந்திய-ரஷ்ய நட்புறவு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான வலிமையை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இரு நாடுகளின் எதிர்காலத்தை வளப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் தோளோடு தோள் நிற்பதாகத் தெரிவித்த அவர், பயங்கரவாதம் என்பது மனித குலத்தின் மதிப்புகள் மீதான நேரடித் தாக்குதல் என்ற இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகக் கூறினார்.

உலகளாவிய ஒற்றுமைதான் இன்றைய சூழலில் பயங்கரவாதத்திற்கு எதிரான மிகப்பெரிய பலம் என்றார் திரு மோடி.

ரஷ்ய குடிமக்களுக்கு விரைவில் இலவச 30 நாள் மின் சுற்றுலா விசா, 30 நாள் குழு சுற்றுலா விசாவை இந்தியா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

“இருதரப்பு உறவுகள் பல வரலாற்று மைல்கற்களை எட்டியுள்ள நேரத்தில், அதிபர் புட்டினின் வருகை அமைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுள்ளது. இவை அனைத்திற்கும் மத்தியில், இந்திய-ரஷ்ய உறவுகள் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கின்றன,” என்றார் பிரதமர் மோடி.

இதையடுத்து வெளியிடப்பட்ட ஒரு கூட்டறிக்கையில், பயங்கரவாதம், நாடு கடந்த குற்றங்கள், பண மோசடி, பயங்கரவாத நிதியுதவி, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் போன்ற சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்த மீண்டும் உறுதி பூண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் கய்தா, ஐஎஸ்ஐஎஸ், அவற்றின் துணை அமைப்புகள் உட்பட, ஐநா பட்டியலிடப்பட்ட அனைத்து பயங்கரவாதக் குழுக்கள், நிறுவனங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள உலக நாடுகளுக்கு இருதரப்பும் அழைப்பு விடுத்தன.

குறிப்புச் சொற்கள்