நடப்பாண்டில் அமெரிக்காவில் இருந்து 1,700 இந்தியர்கள் நாடுகடத்தல்

நடப்பாண்டில் அமெரிக்காவில் இருந்து 1,700 இந்தியர்கள் நாடுகடத்தல்

கோப்புப் படம்: என்டிடிவி

26 Nov 2026 - 7:47 pm

1 mins read

புதுடெல்லி: நடப்பாண்டில் இதுவரை 1,700 இந்தியர்கள் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா உறுதியாக எதிர்ப்பதால், மக்களின் நடமாட்டம், குடியேற்றம் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 1,700 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

குடியேற்றம், சட்டவிரோத நடமாட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாகவும் சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா உறுதியாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடுகடத்தும் நடவடிக்கைகளிலும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதாகத் திரு ரந்தீர் ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.

நாடுகடத்தப்படுவோர் குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட இந்தியர்களின் குடியுரிமையை இந்திய அரசு சரிபார்த்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு (2025) முதல் 4,840க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவால் நாடுகடத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு ஏற்கெனவே தெரிவித்துள்ளது என்றார்.

குறிப்புச் சொற்கள்