பிஜப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே 12 நக்சல்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை (டிசம்பர் 4) மேலும் ஆறு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். பிஜப்பூரில் உள்ள தண்டேவாடா மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் மத்திய ஆயுதப் படையின் கோப்ரா பிரிவினர், மாவட்ட ஆயுதப் படையினர், சத்தீஸ்கர் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து, புதன்கிழமை (டிசம்பர் 3) நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
அதில், 12 நக்சல்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கொல்லப்பட்ட நக்சல்களின் எண்ணிக்கை 18 ஆகக் கூடியுள்ளது.
நக்சல்கள் திருப்பிச் சுட்டதில் மாவட்ட ஆயுதப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த சடலங்கள் மாண்ட வீரர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்தச் சம்பவத்திற்குப் பின்னரும் தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டில் மட்டும் 275 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மார்ச் 31, 2026 வரை மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

