புதுடெல்லி: கடந்த 2009ஆம் ஆண்டுமுதல் அமெரிக்காவிலிருந்து 18,822 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை (டிசம்பர் 4) நாடாளுமன்ற மேலவையில் தெரிவித்தார்.
அந்த எண்ணிக்கை 2023ல் 617ஆகவும் 2024ல் 1,368ஆகவும் இருந்தது.
“இவ்வாண்டு ஜனவரியிலிருந்து 3,258 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் 2,032 பேர் வழக்கமான வணிக விமானங்களிலும் 1,226 பேர் அமெரிக்காவின் குடிநுழைவு, சுங்க அமலாக்கத்துறை அல்லது சுங்க, எல்லைப் பாதுகாப்புத் துறையால் இயக்கப்பட்ட விமானங்கள் வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்று திரு ஜெய்சங்கர் விளக்கமாகக் கூறினார்.
ஆட்கடத்தல் தொடர்பில் மாநில அரசுகளும் தேசியப் புலனாய்வு அமைப்பும் (என்ஐஏ) விசாரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆட்கடத்தல் தொடர்பில் என்ஐஏ 27 வழக்குகளைப் பதிவுசெய்து விசாரித்து வருகிறது. அதன் தொடர்பில் 169 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களில் 132 பேர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆட்கடத்தலில் முக்கியப் பங்கு வகித்த இருவர் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி ஹரியானாவிலும் பஞ்சாப்பிலும் கைதுசெய்யப்பட்டனர். அதன்பின் அக்டோபர் 2ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் இருவர் பிடிபட்டனர்,” என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
“ஆட்கடத்தல் வழக்குகளைப் பொறுத்தமட்டில் பஞ்சாப் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அவற்றை விசாரிப்பதற்காக பஞ்சாப் மாநில அரசு சிறப்புப் புலனாய்வுப் பிரிவையும் உண்மை அறியும் குழுவையும் அமைத்துள்ளது. அப்பிரிவு அளித்த தகவலின்படி, 58 சட்டவிரோதப் பயண முகவர்கள்மீது 25 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,” என்று அவர் விளக்கினார்.
அதுபோல், ஹரியானா மாநிலத்திலும் ஆட்கடத்தல் தொடர்பில் 2,325 புகார்கள் பதிவாகியுள்ளன. 47 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்திலும் முக்கியப் புள்ளி ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
நாடுகடத்தப்படும் இந்தியர்களை மனிதத்தன்மையுடன் நடத்துவது தொடர்பில் அமெரிக்காவுடன் இந்திய வெளியுறவு அமைச்சு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
நாடுகடத்தப்படவிருந்த இந்தியர்களுக்கு விலங்கிடப்பட்டது குறித்து அமெரிக்காவிடம் தமது அமைச்சு கவலையை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.
மேலும், இவ்வாண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வந்த நாடுகடத்தல் விமானத்திற்குப் பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு விலங்கிடப்பட்டதாக எந்தப் புகாரும் தமது அமைச்சுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

