2036 ஒலிம்பிக் போட்டி: இந்தியா, கத்தார் உட்பட 7 நாடுகள் முயற்சி

2036 ஒலிம்பிக் போட்டி: இந்தியா, கத்தார் உட்பட 7 நாடுகள் முயற்சி

படம்: என்டிடிவி

07 Oct 2026 - 7:21 pm

1 mins read

புதுடெல்லி: எதிர்வரும் 2036ஆம் ஆண்டு நடைபெற உள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியில் இந்தியா, கத்தார் உட்பட மொத்தம் ஏழு நாடுகள் களமிறங்கியுள்ளதை அனைத்துலக ஒலிம்பிக் சங்கம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சார்பில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான முக்கியமான மையமாக முன்நிறுத்தப்பட உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் திடல், 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் அகமதாபாத்திற்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகின்றன.

இந்தியா, கத்தார் தவிர்த்து, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, ஜெர்மனி, ஹங்கேரி, துருக்கி ஆகிய நாடுகளும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

தென்னாப்பிரிக்கா இப்போட்டியை நடத்தத் தேர்வு செய்யப்பட்டால், நவீன ஒலிம்பிக் வரலாற்றில் போட்டியை நடத்தும் முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெறும்.

கடந்த காலங்களில் அவசர அவசரமாகப் போட்டியை நடத்தும் நாடுகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் தலைவர் கெர்ஸ்டி கோவென்ட்ரி, அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்பையும் உறுதிசெய்யும் வகையில் வெளிப்படையான வாக்குப்பதிவு முறை பின்பற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விருப்பமுள்ள பிற நாடுகளும் தங்களது விண்ணப்பங்களை அளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 2029ஆம் ஆண்டு நடைபெறும் இறுதி வாக்கெடுப்பின் மூலம் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தப்போகும் நாடு எது என்பது அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
ஒலிம்பிக்விளையாட்டுபோட்டிகுஜராத்தென் கொரியா