தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீர் மாசுபாட்டால் மீன்வளத் துறைக்கு ஆண்டுக்கு ரூ.19,200 கோடி இழப்பு: ஆய்வறிக்கை

2 mins read
eda815ac-7db6-4e49-aa64-5b95c1f53abf
இவ்வாண்டு ஜனவரி 23ஆம் தேதி சமூக அளவிலான மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்பதற்காக வலையுடன் கிளம்பிச் சென்ற அசாம் மாநிலம், காமரூப மாவட்டத்தைச் சேர்ந்த கிராமவாசிகள். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர்நிலைகளில் கலப்பதால் இந்திய மீன்வளத் துறைக்கு ஆண்டுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.93 பில்லியன், ரூ.19,200 கோடி) இழப்பு ஏற்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது.

கழிவுநீர் மேலாண்மையில் மோசமான நிலை காரணமாக, மாசடைந்த நீரைக் குடிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அதனால் ஆண்டுக்கு 246 மில்லியன் அமெரிக்க டாலர் (S$328 மில்லியன்) பொருளியல் இழப்பு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது.

‘பேக் டு புளூ’ எனும் பெருங்கடல் சுகாதாரத் திட்ட அமைப்பும் ‘பெருங்கடல் கழிவுநீர்க் கூட்டணி’ அமைப்பும் இணைந்து ஜப்பானில் நடைபெற்ற உலகப் பெருங்கடல் உச்சநிலை மாநாட்டில் புதன்கிழமை (மார்ச் 12) அந்த ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தன.

அவ்வறிக்கையானது பிரேசில், இந்தியா, கென்யா, பிலிப்பீன்ஸ், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளில் கழிவுநீர் மேலாண்மையில் அக்கறை செலுத்தாததால் ஏற்படும் விளைவுகளை விரிவாக எடுத்துரைத்துள்ளது.

சுத்திகரிக்கப்படாத அல்லது நன்கு சுத்திகரிக்கப்படாத கழிவுநீரே மாசுபாட்டிற்கும் அதனால் ஏற்படும் நோய்களுக்கும் காரணம். அது ஆறு, கடல், குடிநீர் வழங்கும் நீர்நிலைகள் போன்றவற்றில் கலக்கும்போது ஏற்படும் விளைவுகளும் மிக மோசமானதாக இருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட ஐந்து நாடுகளில், இந்தியாவின் மீன்வளத் துறைக்குத்தான் அதிக அளவாக ஆண்டுக்கு 5.4% இழப்பீடு ஏற்படுவதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கடலுணவைப் பொறுத்தமட்டில் இந்தியா முக்கியமான வழங்குநராகத் திகழ்வதால், நீர் மாசுமாடு மீன்வளத் துறைக்கு ஏற்படுத்தும் பாதிப்பு உள்நாட்டிலும் ஏற்றுமதிச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

அத்துடன், கழிவுநீர் கலந்து குடிநீரை அருந்துவதால் அதிக அளவு மருத்துவச் செலவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு விகிதம் 21% மட்டுமே என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் மண் உப்புத்தன்மை கொண்டதாக மாறுவது குறைந்த விகிதத்தில் இருந்தாலும் அதனால் ஆண்டிற்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் வருமான இழப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்