பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக மைசூரு மாநகர மேம்பாட்டுக் கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. இதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, அவர்களின் உறவினர்கள் இருவர்மீது நில முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை, லோக் ஆயுக்தாவும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், சித்தராமையாவின் ரூ.300 கோடி மதிப்பிலான 143 அசையா சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, “நில ஒதுக்கீடு விவகாரத்தில் எனது தலையீடு எதுவும் இல்லை. நான் விதிமீறலில் ஈடுபடவில்லை. என்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சி நடக்கிறது,” எனக் கூறினார்.