4 கால்கள் கொண்ட இளையரின் அறுவை சிகிச்சை வெற்றி

1 mins read
d0650f89-280f-4173-bc10-9e8ae93cf6b6
உத்தரப் பிரதேசத்தின் பலியா நகரைச் சேர்ந்த இவருக்குப் பிறக்கும்போது நான்கு கால்கள் இருந்தன. - படம்: பிடிஐ

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிக்கலான உடல் பாதிப்புடன் சென்ற 17 வயது இளையருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பலியா நகரைச் சேர்ந்த அந்த இளையருக்கு பிறக்கும்போது நான்கு கால்கள் இருந்துள்ளன.

உடலில் வழக்கம்போல் உள்ள இரண்டு கால்களுடன், சிறுவனின் வயிற்றுடன் இணைந்து மேலும் இரண்டு கால்கள் இருந்துள்ளன. இதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்து அகற்றியது.

இதுபற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் துறையின் கூடுதல் பேராசிரியரான டாக்டர் அசூரி கிருஷ்ணா கூறும்போது, 1 கோடி பேரில் ஒருவருக்கு என்ற அளவிலேயே இதுபோன்ற பிரச்சினை ஏற்படும் என்றார்.

“கருத்தரிக்கும்போது, இரட்டைக் குழந்தைகள் உருவானால் அவற்றில் ஒன்று வளர முடியாமல் போகும்போது, அதன் உடல் பாகங்கள் மற்றொரு குழந்தையுடன் ஒட்டிக் கொள்ளும். உலகம் முழுவதும் இதுவரை 42 பேர் நான்கு கால்களுடன் பிறந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

வயிற்றில் ஒட்டியபடி இருந்த இரு கால்களால் அந்தச் சிறுவனின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அது எதிர்காலத்தில் பிற உறுப்புகளையும் கூட பாதிக்கலாம் என மருத்துவர்கள் குழு தெரிவித்தது.

அந்த இளையர் 8ஆம் வகுப்புக்குச் சென்றபோது, உடன் படித்தவர்கள் கேலி செய்ததில் மனதளவில் பாதிக்கப்பட்டு, பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில், அந்த இளையருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது. இதனால், மேற்கொண்டு படிப்பை தொடரக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்