நவி மும்பை: வணிகச் சேவைகளைத் தொடங்கி, 11 மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், நவி மும்பை அனைத்துலக விமான நிலையத்தை, 40 லட்சம் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று செயல்பாட்டுக்கு வந்த இவ்விமான நிலையம், மும்பைப் பெருநகரப் பகுதியின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமாகத் திகழ்கிறது.
இதுவரை ஏறக்குறைய 41 லட்சம் பயணிகள் அவ்விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் 40,88,840 உள்நாட்டுப் பயணிகளும் 12,569 அனைத்துலகப் பயணிகளும் அடங்குவர்.
வருகைதந்த பயணிகள் 20,23,241, புறப்பட்ட பயணிகள் 20,78,168 என்ற அளவில் சமநிலையான போக்குவரத்து பதிவாகியுள்ளது.
விமான இயக்கங்களைப் பொறுத்தவரை, 30,940 உள்நாட்டு, 103 அனைத்துலக விமானங்கள் என மொத்தம் 31,043 பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இண்டிகோ 24,777 விமானங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
கடந்த நவம்பர் 15ஆம் தேதி நிலவரப்படி, 40,868 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஆம்ஸ்டர்டாம், பிராங்க்ஃபர்ட், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட 24 உலகளாவிய சரக்கு மையங்களுக்கு 18 சரக்கு விமான நிறுவனங்கள் சேவை வழங்குகின்றன.
புதிய 2026 குளிர்கால அட்டவணையின்படி, 45 உள்நாட்டு நகரங்களுக்கும் இரண்டு அனைத்துலக நகரங்களுக்கும் இணைப்பு விரிவுபடுத்தப்படுகிறது.
திட்டங்கள் முழுமையாக நிறைவடையும்போது, ஆண்டுக்கு 9 கோடிப் பயணிகளைக் கையாளும் திறன்கொண்டதாக நவி மும்பை விமான நிலையம் உருப்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
