மேற்கு வங்காளத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

2 mins read
9de1f2dc-1502-4fc1-ba11-7339ce6460d0
நீக்கப்பட்டவர்களில் 24 லட்சம் பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. - படம்: ஏஎன்ஐ

கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் 58.8 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) வெளியிட்டது.

பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 58.8 லட்சம் வாக்காளர்களில் 24.17 லட்சம் பேர் இறந்துவிட்டனர் என்றும் 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் ஆணையம் கூறியது.

அவர்கள் தவிர, 12.20 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போய்விட்டதாகவும் 1.38 லட்சம் வாக்காளர்கள் இரு இடங்களில் பதிவு செய்துள்ளனர் என்றும் அது விளக்கம் அளித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 58 லட்சம் பேர் நீக்கப்பட்டது அநியாயம் என்று அந்த மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சௌகதா ராய் தெரிவித்துள்ளார்.

“மேற்கு வங்காளத்தின் வாக்காளர் பட்டியலில் சட்டப்படி இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் பெயரை நீக்குவது என்பது பாஜகவின் திட்டமிட்ட சதி. நீக்கப்பட்டவர்களின் பெயரை இணைக்க வாக்காளர் உதவி மையங்களை அமைப்போம்,” என்று அவர் என்டிடிவியிடம் கூறினார்.

‘எஸ்ஐஆர்’ என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தமது மாநிலத்தில் நடத்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கம் முதலே எதிர்த்து வந்தார்.

இம்மாதத் தொடக்கத்தில் அந்த மாநிலத்தின் கிரு‌ஷ்ணாநகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, “வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அம்மாக்களும் சகோதரிகளும் போராடுவார்கள். அவர்களின் பின்னணியில் ஆண்கள் இருப்பார்கள்,” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அதற்குப் பதிலடி கொடுத்த பாஜக, சட்டவிரோதக் குடியேறிகளை உள்ளடக்கிய வாக்கு வங்கி பறிபோவதை எண்ணி மம்தா பதறுவதாகக் கூறியது.

குறிப்புச் சொற்கள்