மூன்று நாள்களாகத் தோண்டிக் கிடைத்த 50 லட்ச ரூபாய் வைரம்

2 mins read
0025a0b0-0af4-401c-bf25-9a79d8a3e923
சதீஷ், சாஜித் கண்டுபிடித்துள்ள வைரம் 15 கேரட் கொண்டது. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இரண்டு இளையர்கள் மூன்று நாள்களாக நிலத்தைத் தோண்டி ஒரு வைரத்தைக் கண்டுபிடித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

பன்னா மாவட்ட வைர அலுவலகத்தின் அதிகாரிகள், அந்த வைரத்தின் மதிப்பு 50 லட்ச ரூபாய் (S$71,482) இருக்கும் என்று கூறியுள்ளனர்.

பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யான்பூரில் எட்டு மீட்டர் அளவுள்ள நிலத்தைக் குத்தகைக்கு எடுத்த 24 வயது சதீஷ் காதிக், 23 வயது சாஜித் முகம்மது ஆகியோர் மூன்று நாள்களாகத் தோண்டிக் கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் சில சுரங்கத் தொழிலாளர்கள் கைகளால் நிலத்தைத் தோண்டி வைரத்தைக் கண்டுபிடிப்பார்கள்.

இவ்வாண்டு மட்டும் 60 வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பன்னா மாவட்ட வைர அலுவலகத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இரண்டு கேரட்டுக்கும் குறைவான எடை கொண்ட வைரங்களே கிடைத்துள்ளன.

இந்த இருவருக்கும் கிடைத்துள்ள வைரம் 15 கேரட் கொண்டது.

பன்னா வைர அலுவலகத்தின் அதிகாரியான ரவி படேல், “கிருஷ்ணா கல்யான்பூரில் இருபது நாள்களுக்கு முன்பு இரண்டு பேர் அரிய வைரத்தைக் கண்டுபிடித்துள்னர். அந்த வைரத்தை செவ்வாய்க்கிழமை முதலீடு செய்தனர். அது, 50 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும்,” என்றார்.

சதீஷ், சாஜித் ஆகிய இருவரின் தந்தையர்களும் பலமுறை நிலத்தைத் தோண்டினாலும் மிகச் சிறிய வைரங்களையே கண்டுபிடித்துள்ளனர். இருவரின் குடும்பமும் தகரம், செங்கற்களால் கட்டப்பட்ட சாதாரண வீடுகளில் வசித்து வருகின்றன.

“வைரம் கிடைத்திருப்பதால் எங்களுடைய சகோதரிகளுக்கு கடன் வாங்காமல் திருமணம் செய்து வைப்போம்,” என்று சதீஷ் கூறியுள்ளார்.

கடந்த மாதம் ஆறு விவசாயிகள் ஐந்து வைரக்கற்களைக் கண்டுபிடித்தனர். அவற்றில் மூன்று நல்ல தரமான வைரமாகும். மூன்று வைரங்களின் மதிப்பு 12 லட்சமாகும்.

பன்டெல்காண்ட் வட்டாரத்தில் உள்ள பன்னா மாவட்டத்தில் 12 லட்சம் கேரட் வைரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்