இந்தியாவில் 2025ல் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் 6,000 பேர் பணி நீக்கம்

இந்தியாவில் 2025ல் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் 6,000 பேர் பணி நீக்கம்

படம்: ஊடகம்

06 Nov 2025 - 8:15 pm

1 mins read

புதுடெல்லி: நடப்பு ஆண்டில் மட்டும் தகவல் தொழில்நுட்பத்துறையில் உலகெங்கும் இதுவரை 1.12 லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 218 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஏறக்குறைய 6,000 பேரும் அடங்குவர்.

இத்தகவல்கள் Layoffs.FYI என்ற இணையத்தளத்தில் வெளியாகி உள்ளன.

அமேசான், இண்டெல், டிசிஎஸ், மைக்ரோசாஃப்ட், மெட்டா போன்ற பெருநிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை நீக்கியுள்ளன.

உலகின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்து மட்டுமல்லாமல், அந்த நிறுவனம் எந்தத் துறையில் இயங்கி வருகிறது, எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பன போன்ற விவரங்களையும் மேற்குறிப்பிட்ட இணையத்தளத்தில் பெறலாம்.

புதிய வேலை பெறுவோர்க்கு பயனுள்ள தகவல்களும் கிடைக்கின்றன.

பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி என இந்தியாவின் முக்கியமான நகரங்களில் உள்ள நிறுவனங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் 300 ஊழியர்கள் பணியை இழந்துவிட்டனர்.

பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் 1,100 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) வருகைக்குப் பிறகு பணிநீக்கம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

‘ஏஐ’ பயன்பாடும் தனியார் நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும்தான் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கைக்கு முக்கியமான காரணிகளான உள்ளன.

இனிவரும் நாள்களிலும் இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
ஊழியர்வேலைவாய்ப்புநிறுவனம்