புதுடெல்லி: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி நீடிக்க வேண்டும் என ‘இந்தியா டுடே-சிவோட்டர்’ நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் இந்தக் கருத்துக்கணிப்பானது, அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நடத்தப்பட்டது. மொத்தம் 1.25 லட்சம் வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
அதில், இண்டியா கூட்டணி தொடர வேண்டும் என 65 விழுக்காட்டினர் தெரிவித்துள்ள நிலையில், 26% அக்கூட்டணி கலைக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
மேலும், இண்டியா கூட்டணிக்கு ராகுல்காந்திதான் தலைவராக இருக்க வேண்டும் என 24% ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தலைவர் பதவிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொருத்தமானவராக இருப்பார் என 14%, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9% பேர் ஆதரவு தெரிவித்ததாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால், பாஜக கூட்டணி 343 இடங்கள் கைப்பற்றும் என்றும் இண்டியா கூட்டணிக்கு 188 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிப்பதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.