துவாரகா: குஜராத்தில் உள்ள துவாரகா அருகே கால்நடையைக் காப்பாற்றும் முயற்சியில் பேருந்து ஒன்று சாலைத் தடுப்பைத் தாண்டி மூன்று வாகனங்கள் மீது மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்கள் காந்திநகர், பரடியாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்த அடையாளம் தெரியாத பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளதாகக் காவலர்கள் தெரிவித்தனர்.
“சாலையில் திரிந்த மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது, தடுப்பின் மீது மோதி இரண்டு கார்கள், ஒரு பைக் மீது பேருந்து மோதியுள்ளது. குஜராத் மாநிலம், துவாரகா மாவட்டம் அருகே உள்ள துவாரகா-கம்பலியா தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு இந்த விபத்து நடந்தது.
“காயமடைந்தவர்கள் கம்பாலியா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று துவாரகா துணை காவல் அதிகாரி அமோல் ஆம்தே ஏஎன்ஐ ஊடகத்திடம் பேசும்போது கூறினார்.
தீயணைப்புப் படையினரும் சிவில் நிர்வாக அதிகாரிகள் குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

