புதுடெல்லி: உணவு தானிய உற்பத்தியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது என வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
2024-25ஆம் ஆண்டுக்கான பயிர் உற்பத்தியின் இறுதி மதிப்பீடுகளை புதுடெல்லியில் வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, நாட்டில் அரிசி, கோதுமை உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மொத்த உணவு தானிய உற்பத்தியில் 8% சாதனை வளர்ச்சி விகிதம் ஏற்பட்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியானது 106 மில்லியன் டன் அதிகரித்துள்ளது என்றார் திரு சௌஹான்.
“கடந்த ஆண்டில் நாட்டின் அரிசி உற்பத்தி 1,378 லட்சம் டன்களாக இருந்தது. இது நடப்பாண்டு சாதனை அளவாக 1,501 லட்சம் டன்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும்.
“கோதுமை உற்பத்தியும் கடந்த ஆண்டின் 1,132 லட்சம் டன் உற்பத்தியைவிட 46.53 லட்சம் டன் அதிகரித்து சாதனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது,” என்று அமைச்சர் சிவராஜ் சௌஹான் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
துவரம் பருப்பு, உளுந்து, கடலை, பாசிப்பயறு கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கையானது, நாடு முழுவதும் உள்ள ஏராளமான விவசாயிகளுக்கு கணிசமாகப் பயனளிக்கிறது என்றார்.
விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து, அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் திரு சௌஹான் மீண்டும் உறுதி அளித்தார்.

