93 ஆண்டுகால வரலாறு: இந்திய ராணுவ அகாடமியில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் அதிகாரி

1 mins read
4df27e84-9db2-4dd2-9fdb-17609dd73f4c
இந்திய ராணுவக் கழகத்தில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் அதிகாரி சாய் ஜாதவ். - படம்: இன்ஸ்டகிராம்/இந்திய ராணுவக் கழகம்

புதுடெல்லி: இந்திய ராணுவ அகாடமியின் 93 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாகப் பெண் அதிகாரி ஒருவர் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1932ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த அகாடமியில் இதுவரை கிட்டத்தட்ட 67 ஆயிரம் பேர் பயிற்சி முடித்து ராணுவத்தில் இணைந்துள்ளனர். ஆனால், இதுவரை பெண்கள் யாரும் இந்த அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றதில்லை.

இந்நிலையை மாற்றி, இங்கிருந்து தேர்ச்சி பெற்ற ‘முதல் பெண் அதிகாரி’ என்ற வரலாற்றுச் சாதனையை 23 வயதான சாய் ஜாதவ் படைத்துள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர்.

சாய் ஜாதவ், தனது குடும்பத்தில் ராணுவச் சீருடை அணியும் நான்காவது தலைமுறை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது கொள்ளுத்தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றினார்.

அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.

அவரது தந்தை சந்தீப் ஜாதவ் இன்றும் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சாய் ஜாதவ், தற்போது பிரதேச ராணுவத்தில் லெப்டினன்ட் ஆகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதை சாய் ஜாதவின் சாதனை எடுத்துக்காட்டுகிறது.

அவரது இந்த வெற்றி, இளம் பெண்களுக்குப் பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் அவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்