கொச்சி: முன்னணி நடிகை தாக்கப்பட்ட வழக்கிலிருந்து மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான திலீப் குற்றமற்றவர் எனக் கூறி விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவரைக் காரில் கடத்தி, அவரைத் தாக்கிய சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவ்வழக்கில் என்.எஸ். சுனில் என்ற ‘பல்சர்’ சனி, மார்ட்டின் ஆன்டணி, பி. மணிகண்டன், [Ϟ]வி.பி. விஜீஷ், எச். சலீம், பிரதீப் ஆகிய அறுவரும் குற்றவாளிகள் என எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம். வர்கீஸ் அறிவித்தார்.
அவர்களுக்கான தண்டனை விவரம் டிசம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்படும். அவர்களுக்கான பிணை ரத்துசெய்யப்பட்டது. அரசாங்கத் தரப்பு 221 ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. 28 பேர் அரசுத் தரப்புச் சாட்சிகளாக மாறினர். அவமதிப்பு, சதி, பெண்ணை மானபங்கப்படுத்துதல், சட்டவிரோதமாகப் பிடித்து வைத்திருத்தல், வலிமையைப் பயன்படுத்துதல், சான்றுகளை அழித்தல், தகாத முறையில் படம்பிடித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
கடந்த 2017 பிப்ரவரி 17ஆம் தேதி படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சம்பந்தப்பட்ட நடிகை திருச்சூரிலிருந்து கிளம்பிச் சென்றபோது, எர்ணாகுளத்தின் அத்தானி பகுதியில் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பல்சர் சனியும் அவரின் கூட்டாளிகளும் அந்த நடிகையைக் காரில் கடத்திச் சென்று தாக்கியதாகவும், தகாத நிலையில் அவரைப் படம்பிடித்ததாகவும் அரசாங்கத் தரப்பு குறிப்பிட்டது.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, வழக்கின் முதன்மைக் குற்றவாளி விரைவில் கைதுசெய்யப்பட்டார். பின்னர் 2017 ஜூலையில் நடிகர் திலீப் காவலில் எடுக்கப்பட்டார்.
அந்த நடிகையை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நடிகர் திலீப், பல்சர் சனியுடன் இணைந்து பலமுறை சதிசெய்ததாகவும், அவரைத் தகாத நிலையில் படமெடுக்கும்படி அறிவுறுத்தியதாகவும், அதற்காக ரூ.1.5 கோடி கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது.
பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கையை ஏற்று, அவ்வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி ஒருவரைக் கேரள உயர் நீதிமன்றம் நியமித்தது. வழக்கு விசாரணை 2018 மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது. ரகசியமான முறையில் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இவ்வழக்கிலிருந்து தாம் விடுவிக்கப்பட்டதற்காகத் தம் வழக்கறிஞர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளதாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.
“நடிகை தாக்கப்பட்டதற்குப் பின்னால் சதி இருப்பதாக மஞ்சு வாரியர் கோரியதை அடுத்து எனக்கெதிரான சதி தொடங்கியது. காவல்துறை உயரதிகாரிகள், அக்குற்றச் செயலில் ஈடுபட்டோருடன் இணைந்து ஒரு பொய்க்கதையை உருவாக்கினர். பின்னர், சில ஊடகங்கள், செய்தியாளர்களுடன் இணைந்து சமூக ஊடகங்கள் வழியாகவும் காவல்துறை கட்டுக்கதைகளைப் பரப்பியது,” என்று அவர் விளக்கினார்.
இதற்கிடையே, “நீதியின் வழியில் சட்டம் செல்ல வேண்டும். நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் மதிக்கிறோம்,” என்று மலையாளத் திரைக்கலைஞர்கள் சங்கம் (AMMA) ஃபேஸ்புக் வழியாகக் கருத்துரைத்துள்ளது.
ரீமா கலிங்கல், பார்வதி திருவோத்து, ரம்யா நம்பீசன் போன்ற முன்னணி நடிகைகள் பாதிக்கப்பட்ட நடிகைக்குச் சமூக ஊடகம் வாயிலாகத் தங்களது ஆதரவை மறுவுறுதிப்படுத்தியுள்ளனர்.


