ஏஐ தொழில்நுட்பம் உலகளாவிய அளவில் பலன் தர வேண்டும்: மோடி

2 mins read
a7eea154-1739-4b85-bc87-3f96c70bb290
‘அனைவருக்கும் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளில், பிப்ரவரி 2026இல் இந்தியா ஏஐ உச்ச நிலை மாநாட்டை நடத்தும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். - படம்: பிஐபி

ஜோகன்னஸ்பர்க்: அனைவருக்கும் நியாயமான எதிர்காலம் என்பது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டில் பேசிய அவர், தொழில்நுட்பம் மனிதனை அடிப்படையாகக் கொண்டதாகவும் உலகளாவியதாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

‘முக்கியமான கனிமங்கள், கண்ணியமான வேலை, செயற்கை நுண்ணறிவு’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திரு மோடி, “இந்தியாவின் மின்னிலக்கச் சுற்றுச்சூழல் அமைப்பு இந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றுகிறது, இது மின்னிலக்கக் கட்டணங்களில் உலகை வழிநடத்த உதவுகிறது,” என்றார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா தலைமை தாங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், வளர்ந்த உள்ளடக்கம், அணுகல் மூலம் பல்வேறு துறைகளில் பரந்த பங்களிப்பை இந்தியா ஊக்குவித்து வருவதாகக் கூறினார்.

‘அனைவருக்கும் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளில், பிப்ரவரி 2026ல் இந்தியா ‘ஏஐ’ உச்ச நிலை மாநாட்டை நடத்தும் என்றும் அவர் அறிவித்தார். அனைத்து ‘ஜி20’ நாடுகளும் அம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் மொழியையும் ‘ஏஐ’ தொழில்நுட்பம் சென்றடைய உயர் செயல்திறன் கொண்ட கணினி உள்கட்டமைப்பை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, செயற்கை நுண்ணறிவு உலகளாவிய நன்மைக்காக சேவை செய்ய வேண்டும் என்றும் வெளிப்படைத்தன்மை, மனித மேற்பார்வை, பாதுகாப்பு-வடிவமைப்பு கண்காணிப்பு, தவறான பயன்பாட்டைக் கண்டிப்பாகத் தடுப்பதை உறுதி செய்யும் உலகளாவிய ஒப்பந்தம் தேவை என்றும் தெரிவித்தார்.

சமமான அணுகல், மக்கள் தொகை அளவிலான திறன் மேம்பாடு, பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தத்துவத்தை அவர் கோடிட்டுக் காட்டினார்.

செயற்கை நுண்ணறிவு மனித திறன்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், விண்வெளிப் பயன்பாடுகள், மின்னிலக்கப் பரிவர்த்தனை என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், உலக அளவில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.

“இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் நாட்டில் உள்ள அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் உயர் செயல்திறன் கொண்ட கணினி திறன், கட்டமைக்கப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய பலன்களைக் கொடுக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும்.

“செயற்கை நுண்ணறிவு யுகத்தில், ‘இன்றைய வேலைகள்’ என்பதிலிருந்து ‘நாளைய திறன்கள்’ என்ற வகையில் நமது அணுகுமுறையை விரைவாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது,” என்றும் பிரதமர் மோடி கூறினார்.

ஐநா பாதுகாப்பு மன்றத்தில் சீர்திருத்தம் தேவை என்பது இப்போது ஒரு கட்டாயமாகிவிட்டது என்றும் இதை, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இதை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்