மும்பை: நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் ரூ.22,000 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தைச் சந்தித்த போதிலும், அதன் மறுசீரமைப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் வாரியம் உறுதியாக உள்ளது என்று சுயாதீன இயக்குநர் சஞ்சீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
ஜேஆர்டி டாடா நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஜேஆர்டி டாடாவின் 122வது பிறந்தநாள் விழாவில் சிறப்புரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இழப்பு குறித்த விமர்சனங்களை வாரியம் வரவேற்கிறது என்றாலும் கடந்த ஆண்டு மூன்று முக்கியக் காரணங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக மேத்தா விளக்கினார்.
ஜூன் 2025ல் நிகழ்ந்த விமான விபத்து, அதன் பின்விளைவுகள், இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டது, மேலும் ஈரான் போருக்குப் பிறகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு ஆகியவையே அந்தக் காரணங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வான்வெளி மூடலால் விமானப் பயண நேரம் அதிகரித்து, எரிபொருள் செலவு கூடுவதாகவும் இது மேற்கத்திய போட்டியாளர்களை இதே அளவுக்குப் பாதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அகமதாபாத் விபத்து குறித்துப் பேசிய அவர், பாதுகாப்பு, அக்கறை, பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கு மற்ற எதற்கும் மேலாக முதலிடம் அளிக்க வேண்டிய வாரியத்தின் கடமையை அது மேலும் வலுப்படுத்தியுள்ளது என்றார்.
எத்தியோப்பியன் ஏர்லைன்சை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்திய புதிய தலைமை நிர்வாக அதிகாரி தெவோல்ட் கெப்ரேமரியம் முக்கியமான தருணத்தில் இணைந்திருப்பதை வரவேற்பதாகவும் புதிய விமானங்கள், ஓய்வறைகளுக்கு இணையாக உலகத்தரம் வாய்ந்த செயல்பாட்டை அவர் உறுதி செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் திரு மேத்தா தெரிவித்தார்.
டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் அழைப்பின் பேரில் வாரியத்தில் இணைந்ததை நினைவுகூர்ந்த அவர், ஏர் இந்தியா, 600 புதிய விமானங்களுக்கு ‘ஆர்டர்’ அளித்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களைப் புதுப்பித்து வருவதாகவும் ஏ350, புதிய பி787-900 விமானங்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
