புதுடெல்லி: இழப்பில் இயங்கிவரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், நடப்பு நிதியாண்டில் செலவுகளை 60 பில்லியன் ரூபாய் (838 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) வரை குறைக்க அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெவோல்டே கெப்ரேமரியம் திட்டமிட்டுள்ளார்.
புதன்கிழமை (நவம்பர் 25) அன்று நடைபெற்ற ஊழியர்கள் கூட்டத்தில் புதிய திட்டங்களை அவர் முன்வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா, அதன் குறைந்த கட்டணப் பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இடையே சில துறைகளை இணைப்பது, பிரத்தியேக சரக்குப் போக்குவரத்துச் சேவையைத் தொடங்குவது, சுற்றுலாப் பயணத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது ஆகியவை முக்கிய நடவடிக்கைகளில் அடங்கும்.
மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை முதன்மைக் குழுமத்துடன் இணைக்கும் யோசனையும் பரிசீலனையில் உள்ளது. மத்திய கிழக்கு, ஐரோப்பா நோக்கிய மேற்குத் திசை விமானங்கள், புதுடெல்லிக்குப் பதிலாக மும்பை, பெங்களூருவில் இருந்து இயக்கப்பட உள்ளன.
காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 2025 முதல் இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், பயணத் தூரத்தைத் தவிர்க்க இந்த மாற்றம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் ஏர் இந்தியா 220 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பைச் சந்தித்தது. ஜூன் 2025ல் ஏற்பட்ட கோர விபத்து, வான்வெளி மூடல், ஈரான் போர் காரணமாக உயர்ந்த எரிபொருள் செலவு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை இந்த நெருக்கடிக்குக் காரணங்களாக அமைந்தன.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான தெவோல்டே, கடந்த செப்டம்பரில் பொறுப்பேற்றார்.
பராமரிப்புச் செலவுகளைக் குறைப்பதோடு, விமானங்களை விரைவாகத் திருப்பி அனுப்புவதில் ஊழியர்கள் கூடுதல் வேகம் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
