புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு மேலும் மோசமடைந்ததால் அதனைக் கட்டுப்படுத்தும் நான்காம் கட்ட செயல்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) காலையில் காற்றின் தரக் குறியீடு 459 என்ற மோசமான நிலையை எட்டியது.
இதையடுத்து, காற்று மாசைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டமான நான்காம் கட்டத்தின்படி, மாநிலத்தில் அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் லாரிகளைத் தவிர அனைத்து நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக தினமணி தகவல் தெரிவித்தது.
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்து சந்திப்புகளில் சிவப்பு விளக்கின்போது காத்திருக்கும் சமயத்தில் வாகனங்களை அணைக்குமாறும் அது அறிவுறுத்தியது.
நகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 விழுக்காட்டு ஊழியர்களுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகளை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாள்களில் மட்டும் நேரடி வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட செயல்திட்டத்தின்போது நெடுஞ்சாலை, சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கும், கட்டட இடிப்புப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

