அனில் அம்பானியின் ரூ.9,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

அனில் அம்பானியின் ரூ.9,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

கோப்புப் படம்: ஊடகம்

21 Nov 2025 - 12:46 pm

1 mins read

புதுடெல்லி: ரிலையன்ஸ் குழுமத் தலைவரான அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

அவருக்குச் சொந்தமான சில நிறுவனங்களுக்குச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஏற்கனவே, அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கிய நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் கூடுதலாக ரூ.1,400 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்குவதற்குத் தற்போது அத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம், இந்த வழக்கில் மொத்தமாக ரூ.9,000 கோடி மதிப்புள்ள அனில் அம்பானியின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட வழக்கில் அவரை நேரில் முன்னிலையாக அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர் காணொளிக் காட்சி மூலமாக முன்னிலையாவதாகத் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரை நேரில் முன்னிலையாகும்படி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து அனில் அம்பானியும் அவரது நிறுவனமும் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்