2027 பொது விடுமுறை அறிவிப்பு வராததால் நாள்காட்டி தயாரிப்புப் பணிகள் தாமதம்

2027 பொது விடுமுறை அறிவிப்பு வராததால் நாள்காட்டி தயாரிப்புப் பணிகள் தாமதம்

படம்: இந்து தமிழ் திசை

15 Oct 2026 - 2:55 pm

2 mins read

சென்னை: 2027ஆம் ஆண்டுக்கான அரசுப் பொது விடுமுறை அறிவிப்பு தாமதமாகி வருவதால், தமிழ்நாட்டில் நாள்காட்டி (காலண்டர்), டைரி தயாரிப்புத் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும், அடுத்த ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரி தயாரிப்புப் பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கப்படும்.

அதற்கேற்ப அரசுப் பொது விடுமுறை நாள்கள் பற்றிய அறிவிப்பை அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தமிழக அரசு வெளியிடுவது வழக்கம்.

அரசு அறிவிப்பு வெளியாவதற்கு முன் காலண்டர், டைரி தயாரிப்பை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடங்க முடியாது.

ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் பாதி வரை கடந்துவிட்ட நிலையில், 2027ஆம் ஆண்டில் எத்தனை நாள்கள் பொது விடுமுறை, அந்த நாள்கள் எவை என்ற அறிவிப்பை தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை.

பொது விடுமுறை நாள்களை முடிவு செய்து அறிவிப்பு வெளியிடுவது பொதுத்துறையின் வேலை.

அந்த வேலை தற்போது காலதாமதமாவது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “பண்டிகை விடுமுறை தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து சில தகவல்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த விவரங்கள் கிடைத்ததும் விடுமுறை நாள்கள் பற்றிய அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும்,” என்றனர்.

ஆனால், எவ்வளவு நாள்களுக்குள் அறிவிப்பு வரும் என்பது குறித்து அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

அதனால் காலண்டர், டைரி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு நாளும் தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத் துறை அலுவலகத்திற்குப் படையெடுத்து வருகின்றனர்.

காலண்டர், டைரி தயாரிப்புப் பணிகளை விரைவாகத் தொடங்கினால்தான் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைவதற்கு முன் அவற்றைக் காய வைக்க முடியும்.

மழைக் காலத்தில் அவற்றைக் காயவைப்பது சிரமம் என்று அவற்றின் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்