சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அண்மையில் வெளியான ‘டியூட்’ படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் கண்டுள்ளது.
இப்படத்தில் இளையராஜா இசையமைப்பில், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கருத்த மச்சான்’, ‘நூறு வருஷம்’ ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, அப்பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவ்விரு பாடல்களையும் பயன்படுத்த சோனி நிறுவனத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக ‘டியூட்’ படத் தயாரிப்புத்தரப்பு தெரிவித்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “திரையரங்கு, ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு, தற்போது வழக்கு தொடுப்பது ஏன்?” என்று இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ஏற்கெனவே தயாரிப்பாளர் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியபோது, அதுபோல தயாரிப்பாளர் யாரும் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

