புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டேரியோ அமோடேய் புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
நம்பகமான, எல்லாரும் புரிந்து இயக்கக்கூடிய ஏஐ அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது ஆந்த்ரோபிக் நிறுவனம்.
இந்நிலையில் டேரியோ உடனான சந்திப்புக்குப் பிறகு தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் விரிவாக்கத்தை வரவேற்பதாகவும் முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கு ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“துடிப்பான தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பையும் திறமையான இளையர்களையும் கொண்டுள்ள இந்தியா, மனிதனை மையமாகக் கொண்ட மற்றும் பொறுப்பான ஏஐ கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்கிறது,”| என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.