சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் எதிர்ப்பு ஆர்வலர் பர்விந்தர் சிங் ஜோதா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஒரு மருந்துக்கடையில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) காலை அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அந்த மருந்துக் கடையில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகத் தகவலறிந்து நண்பர்கள் நால்வருடன் அங்கு சென்ற பர்விந்தர் சிங், கடை உரிமையாளரிடம் அது குறித்துக் கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்தச் சம்பவத்தை பர்விந்தர் சிங் தமது ஃபேஸ்புக்கில் நேரலை செய்துகொண்டிருந்தார். அப்போது மருந்துக் கடை உரிமையாளர் துப்பாக்கியை எடுத்து நீட்டினார். உடனே பர்விந்தர் சிங் ‘சுடு, பார்க்கலாம்’ என்று ஆவேசத்துடன் கத்தினார். ஆத்திரத்துடன் காணப்பட்ட கடை உரிமையாளர் சரமாரியாகச் சுட்டார். பர்விந்தர் சிங் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற நால்வரும் காயமடைந்தனர்.
ஐந்து நிமிட ஃபேஸ்புக் காணொளியில், பர்விந்தர் சிங் ஒரு முதியவருடன் நின்றுகொண்டு கேள்வி கேட்பதைக் காணமுடிந்தது. அந்தக் கடையில் இருந்து தாம் போதை மாத்திரைகளை வாங்கியதாகக் கூறுவதும் அதில் பதிவாகி இருந்தது.
மருந்துக் கடை உரிமையாளரிடம் நடந்த விவாதம் மட்டும் நான்கு நிமிடங்கள் அந்தக் காணொளியில் இருந்தது. அந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
