கௌஹாத்தி: பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு இந்தியாவின் அசாம் மாநில அரசு ஸ்கூட்டர் பரிசு வழங்கவுள்ளது.
டாக்டர் பனிகாந்தா ககாதி விருதுத் திட்டத்தின்கீழ் இப்பரிசு வழங்கப்படவுள்ளது.
அதன்படி, 75 விழுக்காட்டிற்குமேல் மதிப்பெண் பெற்ற 5,566 மாணவர்கள், 60 விழுக்காட்டிற்குமேல் மதிப்பெண் பெற்ற 30,209 மாணவியர் என மொத்தம் 35,775 பேர் ஸ்கூட்டர் பரிசு பெறவுள்ளனர்.
இம்மாதம் 30ஆம் தேதி நடக்கும் விழாவில் அவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு வழங்கப்படும் என்று அசாம் மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார்.
அத்துடன், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 75 விழுக்காட்டிற்குமேல் மதிப்பெண் பெற்ற 27,183 மாணவர்களுக்குத் தலா ரூ.15,000 பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 29ஆம் தேதி இந்த ரொக்கப்பரிசு வழங்கப்படவுள்ளது.

