மம்தா பானர்ஜியைக் கத்தியால் தாக்க முயற்சி: கோல்கத்தாவில் பரபரப்பு

மம்தா பானர்ஜியைக் கத்தியால் தாக்க முயற்சி: கோல்கத்தாவில் பரபரப்பு

படம்: என்டிடிவி

14 Oct 2026 - 4:41 pm

1 mins read

கோல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை, ஒரு பெண் கத்தியுடன் தாக்க முயன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, கோல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்துக்கு வெளியே பிரம்மாண்டமான துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) அப்பந்தலில் சிறப்புப் பூசைகளைத் தொடங்கி வைப்பதற்காக மம்தா பானர்ஜி வருகை தந்தார்.

அப்போது, அக்கூட்டத்தில் இருந்த ஒரு பெண், திடீரென மம்தாவின் சேலையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பாதுகாவலர்களும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும் உடனடியாக அவரைப் பிடித்துச் சோதனையிட்டனர். அப்போது, அவர் தமது சேலைக்குள் கூர்மையான கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் யார், எந்த நோக்கத்திற்காகக் கத்தியுடன் பந்தலுக்கு வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மம்தாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள இந்தக் குறைபாடு குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்