புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய, பிரபலமான புட்டிக் குடிநீர் நிறுவனமான பிஸ்லெரியின் குடிநீர் மாதிரியில் ‘கோலிஃபார்ம்’ எனும் நுண்ணுயிரி இருப்பதால் அது பாதுகாப்பற்றது என இந்திய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அண்மையில் வெளியாகும் இரண்டாவது கண்டுபிடிப்பு இது.
பிஸ்லெரியின் 20 காசு விலைகொண்ட புட்டிகள் இந்தியாவில் மிகப் பிரபலம். US$3.5 பில்லியன் (S$4.52 பி.) மதிப்புள்ள இந்தியப் போத்தல் குடிநீர்ச் சந்தையில், பெப்சிகோ, கோக-கோலா ஆகியவற்றுடன் போட்டியிட்டு இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், புற்றுநோயை ஏற்படுத்தக்கக்கூடிய வேதிப்பொருள்கள் இருந்ததால் பிஸ்லெரி மாதிரி பாதுகாப்பற்றது என உணவு ஒழுங்குமுறை ஆணையம் இவ்வாரம் கூறியிருந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான இரண்டாவது அறிவிப்பில், நுண்ணுயிரி இருப்பதைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட தொகுதியின் விற்பனையைத் தடை செய்யுமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டது. மறுபரிசோதனையிலும் அம்மாதிரி பாதுகாப்பற்றது என உறுதியானது.
மும்பையில் செயல்படும் இந்நிறுவனத்திற்கு, நாட்டில் 130 ஆலைகள் உள்ளன. 5,980 விநியோகிப்பாளர்களும் செயல்படுகின்றனர்.
நிறுவனம், அரசாங்க அறிவுறுத்தலின்பேரில் ஆகஸ்ட்டில் அத்தொகுதியைத் திரும்பப் பெற்றதாக சனிக்கிழமை (நவம்பர் 18) தெரிவித்தது. தற்சார்பு ஆய்வுக்கூடச் சோதனையில் அத்தொகுதி அனைத்து உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளையும் பூர்த்தி செய்ததாகக் கூறிய பிஸ்லெரி, ஆணையத்துடன் முழுமையாக ஒத்துழைப்பதாகத் தெரிவித்தது.
இதையடுத்து, நவம்பர் 23ஆம் தேதி வெளியான தகவலின்படி, புட்டிக் குடிநீர், கனிம நீர் நிறுவனங்களில் வழக்கமான ஆய்வுகளையும் மாதிரிச் சோதனைகளையும் நடத்தி, விதிமீறல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பெப்சிகோ, டாடா கன்ஸ்யூமர், கோக-கோலா, ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ஆகியவற்றின்மீதான கண்காணிப்பையும் அதிகரிக்கும்.
முதல் கண்டுபிடிப்புக்காக சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படக்கூடிய வழக்கை பிஸ்லெரி எதிர்கொள்கிறது.
