இரண்டு நாள்களுக்குப் பிறகு வந்து சேர்ந்த பயணப்பெட்டி; ரூ.70,000 இழப்பீடு வழங்க உத்தரவு

இரண்டு நாள்களுக்குப் பிறகு வந்து சேர்ந்த பயணப்பெட்டி; ரூ.70,000 இழப்பீடு வழங்க உத்தரவு

கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

13 Nov 2023 - 11:31 am

1 mins read

பெங்களூரு: பயணிகள் இருவரை ஏற்றிச் சென்றபோதும் அவர்களது பயணப் பெட்டிகளை ஏற்றிச் செல்ல மறந்ததால் அவர்களின் விடுமுறைச் சுற்றுப்பயணத் திட்டங்கள் பாழாயின.

இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர்கள் போலா வேத்வியாஸ் ஷெனோய் - சுரபி ஸ்ரீநிவாஸ். இந்த இணையர் கடந்த 2021 நவம்பரில் அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டனர்.

அதன்படி நவம்பர் 1ஆம் தேதி இண்டிகோ விமானம் மூலம் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் சென்றடைந்தனர். ஆயினும், அவர்களது பயணப்பெட்டி வந்துசேரவில்லை.

விசாரித்தபோது, அவர்களது பயணப்பெட்டி பெங்களூரிலேயே இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மறுநாள் அவர்களது பயணப்பெட்டிகளை ஒப்படைப்பதாக இண்டிகோ ஊழியர்கள் உறுதியளித்தனர்.

ஆனால், நவம்பர் 3ஆம் தேதிதான் பயணப்பெட்டி அவர்களின் கைக்கு வந்துசேர்ந்தது. அதனுள்ளேதான் துணிமணிகள், மருந்துப்பொருள்கள், படகில் செல்வதற்கான பயணச்சீட்டுகள் உள்ளிட்டவை இருந்தன.

இரு நாள்களுக்குப் பிறகே பயணப்பெட்டி கிடைத்ததால் அவர்களது சுற்றுப்பயணத்தில் கிட்டத்தட்ட பாதி நாள்கள் வீணாயின. மேலும், அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்களை அவர்கள் விலைகொடுத்து வாங்கவும் நேரிட்டது.

இதனால் கொதிப்படைந்த சுரபி-போலா இணையர், பெங்களூரு திரும்பியதும் இண்டிகோ நிறுவனத்திற்குச் சட்டரீதியாகக் கடிதம் அனுப்பினர். ஓராண்டிற்குப் பிறகு, பயனீட்டாளர் குறைதீர்ப்பு ஆணையத்தையும் அவர்கள் அணுகினர்.

வழக்கை விசாரித்த ஆணையம், இழப்பீடு, மனஉளைச்சல், வழக்குச் செலவு ஆகியவற்றுக்காக இண்டிகோ நிறுவனம் அந்த இணையர்க்கு ரூ.70,000 வழங்க உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்