பெங்களூரு: தென்னிந்தியாவில் உள்ள இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டமான, மிகவும் தாமதமான பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை, தற்போது 2026 ஜூலைக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.15,188 கோடி மதிப்பிலான இந்த விரைவுச்சாலை, மூன்று மாநிலங்களில் பரவியுள்ளது. 2022ல் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட பிறகு, 2023க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு தாமதங்களால் இந்த விரைவுச்சாலை கட்டி முடிக்கப்படுவது மூன்று ஆண்டுகளுக்குமேல் தள்ளிப்போனது.
பெங்களூரு மத்திய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி.மோகனின் கேள்விக்குப் பதிலளித்தபோது, இந்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) இந்தத் தாமதத்தை உறுதிப்படுத்தினார்.
தற்போது, 263.4 கி.மீ. நீளமுள்ள விரைவு நெடுஞ்சாலையில் பாதிக்கும் குறைவான, அதாவது 100.7 கி.மீ. மட்டுமே நிறைவடைந்துள்ளது.
தேவையான அனுமதியைப் பெறுவதிலும் நிலத்தைக் கையகப்படுத்துவதிலும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தாமதத்துக்குக் காரணமாக இருக்கலாம்.
இந்த விரைவுச்சாலை நிறைவடைந்தவுடன், பெங்களூரு-சென்னை இடையேயான பயண தூரத்தையும் நேரத்தையும் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

