கோல்கத்தா: இந்தியாவின் குஜராத் மாநில எல்லையோரம் பாகிஸ்தானைச் சேர்ந்த 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
எல்லைப் பாதுகாப்புப் படையின் இருவேறு பிரிவுகளும் அதன் கடல் எல்லைப் பிரிவும் இணைந்து கோரி கிரீக் புறக்காவல் நிலையம் அருகே கடலோரத்தில் நடத்திய சோதனையில் அவர்கள் சிக்கினர்.
கைதான மீனவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அவர்கள் பயன்படுத்திய இயந்திரப் படகை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்தப் படகில் ஏறத்தாழ 60 கிலோ மீன்கள், ஒன்பது மீன்பிடி வலைகள், டீசல், உணவுப் பொருள்கள், ஐஸ், மரக்குச்சிகள், ஒரு கைப்பேசி, 200 ரூபாய் மதிப்புள்ள பாகிஸ்தான் நாணயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து அந்த மீனவர்களிடம் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் பங்ளாதேஷ் காவல்துறை அதிகாரி இந்தியாவுக்குள் ஊடுருவியபோது கைவும் களவுமாகப் பிடிபட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 6 மணிக்கும் 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்காளத்தின் ஹக்கிம்பூர் எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுற்றுக்காவலில் ஈடுபட்டு இருந்தபோது அவர் பங்ளாதேஷில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்ததை அவர்கள் கண்டனர்.
அவரைப் பிடித்து அடையாளப் பத்திரங்களைச் சோதித்தபோது பங்ளாதேஷின் உயர் ரக காவல்துறை அதிகாரி அவர் என்பது தெரிய வந்தது.
கூடுதல் விசாரணைக்காக அவர் மேற்கு வங்காள காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

