புதுடெல்லி: இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) புதிய தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின், முடிவெடுக்கும் பொறுப்பில் இருக்கும் ஆக உயரிய குழுவான அதன் நாடாளுமன்றக் குழு, திரு நிதின் நபினுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) இப்பொறுப்பை ஒப்படைத்தது. அடுத்த மாதமே அவர் கட்சியின் தேசியத் தலைவராக நியமிக்கப்படக்கூடும் என்று தகவல் தெரிந்தவர்கள் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
45 வயது நபின், பாஜகவின் ஆக இளம் செயல் தலைவராவார்.
மேற்கு வங்கம், அசாம், தமிழகம், கேரளா, புதுவை ஆகியவற்றில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளன. இந்தச் சூழலில் திரு நபின் பாஜகவை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜனவரி மாதம் திரு நபின், பாஜகவின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று தகவல் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர். அதற்குப் பிறகு அவரின் நியமனத்தை அங்கீகரிக்க பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு ஒன்றுகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகவல்களை வெளியிட்டவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்திருக்கும் நிதின் நபின், பீகாரின் பங்கிபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகிக்கிறார். அவர் இருமுறை மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.
மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா, 65, தற்போது பாஜக தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாஜக தலைவர் பொறுப்பை ஏற்ற திரு நட்டாவின் தவணைக் காலம் 2024ல் நிறைவடைந்தது. சென்ற ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியை வழிநடத்த அவரின் தவணைக் காலத்தை நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டது.
திரு நபினின் நியமனம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “மக்களின் கனவுகளை நனவாக்க அவர் ஈடுபாட்டுடன் உழைத்திருக்கிறார். அவரின் துடிப்பும் ஈடுபாடும் வருங்காலத்தில் நமது கட்சியை வலுவடையச் செய்யும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

