கோவை: கோவை வட்டாரத்தில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
பறவைக் காய்ச்சல் தொடர்பான கண்காணிப்பையும் அவர்கள் அதிகமாக்கி உள்ளனர்.
நவம்பர் 18ஆம் தேதி கோவை சித்தாபுதூர் பிகேஆர் நகரில் ஓர் ஓடை அருகே 14 குளத்து நாரைகள் உயிரிழந்து கிடந்தன.
வனத்துறையினர் அவற்றின் உடல்களைச் சேகரித்து, முழுப் பறவை மாதிரிகளையும் பறவைக் காய்ச்சல் பரிசோதனைக்காக போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகத்துக்கு அனுப்பினர்.
பரிசோதனைக்குப் பிறகு, உயிரிழந்த நாரைகளிடம் பறவைக் காயச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி சார்பில் தேவையான உயிரியல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அத்துடன், நாரைகள் இறந்து கிடந்த இடத்தைச் சுற்றிலும் 1 கி.மீ. தொலைவுக்கு எந்தக் கோழிப் பண்ணையும் இல்லை என்பதும் எந்தக் கோழி இறப்பும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், கோவை மாவட்டத்தில் உள்ள பிராய்லர் கோழிப் பண்ணையாளர்களுக்கு அவர்களின் சங்கங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சந்தேகம் அளிக்கும் வகையில் கோழிகள் இறந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக - கேரள எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளிலும் சிறப்புக் கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையினரும் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
