புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு கவலை கொண்டுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாட்டை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் குறிப்பிட்டார்.
மணிப்பூரில் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) திருத்தச்சட்டம், 2024ஐ நிறைவேற்றுவதற்கான சட்டப்பூர்வ தீர்மானத்தின் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துப் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், காற்று மாசுபாடு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் பலனாக டெல்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது 90% குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா, அதன் முக்கிய பகுதியான வனங்களை பாதுகாக்க மகத்தான பணிகளை செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நிலத்தடி நீர் என்பது மாநில பிரச்சினை என்றும், சில மாநிலங்கள் மட்டுமே அதை ஒழுங்குபடுத்த சட்டங்களை இயற்றியுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மாநிலங்கள் நிலத்தடி நீரை தொடர்ந்து அதிக அளவில் கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மாசுபாடு என்பது நாடு தழுவிய அளவிலான தீவிரமான பிரச்சினை என்பதை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.
இப்பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறியதை அரசு ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

